தொழிலாளர் பாடு திண்டாட்டம்: லாபத்தில் இயங்கிய நிறுவனம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்ட அவலம்
தொழிலாளர் பாடு திண்டாட்டம்: லாபத்தில் இயங்கிய நிறுவனம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்ட அவலம்
ADDED : ஏப் 24, 2025 05:41 AM

இந்தியா-- இலங்கை ஒப்பந்தப்படி, 1968ல், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக, 11,000 ஏக்கர் வனப்பகுதி வனத்துறையிடம் பெற்று, தேயிலை தோட்டங்களாக மாற்றி, தமிழக அரசு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) உருவாக்கப்பட்டது.
அதில், நீலகிரி மாவட்டம் குன்னுாரை தலைமை இடமாக கொண்டு, குன்னுார், கோத்தகிரி, சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், கொளப்பள்ளி, தேவாலா, மரப்பாலம், நாடுகாணி, உட்பட, 9 பிரிவுகள் செயல்பட்டன. 1990ல், கோவை மாவட்டத்தில் வால்பாறை; நீலகிரியில் நடுவட்டம் பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு அரசிடம் இருந்து பணம் பெறாமல் முழுமையாக டான்டீ லாபத்தின் நிதியில் செயல்படுத்தப்பட்டது.
வளர்ச்சியால் லாபம்
மேலும், மற்ற துறைகளுக்கும் லாப தொகை வழங்கி, அரசுக்கு முழு பயனாக இருந்தது. 1998ல் 30 கோடி ரூபாய் லாப ஈவு தொகையாக, தமிழக அரசுக்கு டான்டீ நிர்வாகம் வழங்கியது.
அந்நேரத்தில், மாநில அரசு, மத்திய அரசுக்கு வருமான வரி கட்டுவதை தவிர்க்க, ஒரு எக்டருக்கு 1200 ரூபாய் என இருந்த குத்தகை தொகையை, 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதால், டான்டீ நிதி சுமையில் சிக்கயதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதே காலகட்டத்தில், தேயிலை விலை வீழ்ச்சி மற்றும், நிதியை கட்ட முடியாமல் திணறிய போது, குத்தகை பணத்தையும் அரசு, நஷ்ட கணக்கில் சேர்த்தது. குத்தகை தள்ளுபடி செய்ய தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
ஆட்குறைப்பு நடவடிக்கை
இதன் காரணமாக, கடந்த 2000மாவது ஆண்டில் ஏற்பட்ட தேயிலை விலை வீழ்ச்சியால், சம்பளம் கொடுக்க முடியாமல் ஆட்குறைப்பு செய்ததால், உற்பத்தி வெகுவாக குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில், 8000 நிரந்தர தொழிலாளர்கள்; 5000 தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 3500 நிரந்தர தொழிலாளர்கள், 500 தற்காலிக தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். உற்பத்தி பணியில், 70 சதவீத பேரும், மற்றவர்கள் தோட்டம் மற்றும் நிர்வாக பணியில் உள்ளனர்.
கைவிடப்பட்ட சந்தை பணி
தரமான தேயிலையை சந்தைப்படுத்த, 2004ல் தமிழகத்தில் 'சென்னை, கோவை, மதுரை, திருச்சி,' என, 4 கோட்டம் ஏற்படுத்தி, அனுபவம் வாய்ந்த அலுவலர்கள் நியமித்து, குறியீடு இலக்கு ஊக்குவிக்கப்பட்டது.
தகுதி வாய்ந்த முகவர்கள் நியமித்து, அரசு துறைகளுக்கு கடிதம் வழங்கி, போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறை கேண்டீன்களுக்கு தேயிலை வழங்கப்பட்டது. 2008க்கு பிறகு இந்த முயற்சி திடீரென கைவிடப்பட்டது.
மேலும், ஆளும் கட்சியினர் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு அதிக சம்பளத்தில் அலுவலக பணிகள் வழங்கி வந்தது. தொழிலாளர்களின் வாரிசுகள் நர்ஸ், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்த போதும், அலுவலக பணிகளை தகுயானவர்களுக்கு வழங்கவில்லை.
இதனால், தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக, டான்டீ திறக்கப்பட்டதன் நோக்கம் மறைந்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பை தந்துள்ளது. மிகவும் குறைந்த சம்பளம் இங்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதால் பலரும் மாற்று பணிகளுக்கு சென்று விட்டனர்.
வனத்துறையிடம் ஒப்படைப்பு
'டான்டீ' நிர்வாகம் ஆட்குறைப்பை மேற்கொண்டதால், காடுகளாக வளர்ந்த தேயிலை செடிகளால், வனவிலங்கு அச்சம் ஏற்பட்டு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணம் காட்டிய அரசு, இந்த இடத்தை மீண்டும் வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, நீலகிரி மற்றும் வால்பாறை பகுதியில், 5,000 ஏக்கர் பரப்பளவு தேயிலை தோட்டம் மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதனால், தற்போதுள்ள தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை கூட முழுமையாக செய்து கொடுக்காமல் அவர்கள் தானாக வெளியேறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள எஸ்டேட் அலுவலகங்களில், 765 அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது, 165 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். அலுவலர்கள் குடியிருந்த பழமை வாய்ந்த கற்சுவர் வீடுகள் பாழடைந்து வருகிறது. இவற்றை பராமரித்து வாடகைக்கு கொடுத்தால் 'டான்டீ'க்கு வருமானம் கிடைக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொழிலாளர் நிலை பரிதாபம்
மறுபுறம், டான்டீ தோட்டங்களில் உள்ள குடியிருப்புகள், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், குன்னுார், கோத்தகிரி, சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், கொலப்பள்ளி, தேவாலா, மரப்பாலம், நாடுகாணி, மழை காலத்தில் வீடுகள் ஒழுகும் நிலையிலும், தடுப்பு சுவர் இல்லாமல் இடியும் நிலையிலும் உள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன.
அப்பகுதிகளில் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால், நோய் பரவும் அபாயம் உள்ளது. குளியல் அறை, கழிப்பிடங்கள் பராமரிப்பில்லாமல் உள்ளன.
-நிருபர் குழு-