12 ரயில் திட்டங்களுக்கு நிலம் எடுக்க நடவடிக்கை ஐந்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல்
12 ரயில் திட்டங்களுக்கு நிலம் எடுக்க நடவடிக்கை ஐந்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல்
UPDATED : செப் 28, 2025 05:01 AM
ADDED : செப் 28, 2025 04:59 AM

தமிழகத்தில், 12 ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில், பல்வேறு வழித்தடங்களில் புதிதாக அகலப்பாதை அமைப்பது உட்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னை காரணமாக, திட்டப் பணிகள் தாமதமாகின்றன.
இதற்கு தீர்வு காண்பதற்காக, போக்குவரத்து, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் 13 மாவட்ட கலெக்டர்கள், தெற்கு ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது.
இது குறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வு செய்யப்பட்டது. நிலம் எடுப்பதில் எந்த பகுதியில், என்ன பிரச்னை உள்ளது என ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு தீர்வு காண, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
கூட்டத்தில் பங் கேற்ற, 13 மாவட்ட கலெக்டர்களில், 11 பேர், நிலம் எடுப்பு பணிகளை முடிக்க உடனடி ஒப்புதல் அளித்தனர்.
இப்பணிகளை அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றுவதாக, அனைத்து துறை அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தனர்.
இதனால், நிலப்பிரச்னைகள், ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -