கோர்ட் உத்தரவை மீறி மண் கொள்ளை; ஆய்வு செய்ய வந்த நீதிபதி அதிர்ச்சி
கோர்ட் உத்தரவை மீறி மண் கொள்ளை; ஆய்வு செய்ய வந்த நீதிபதி அதிர்ச்சி
ADDED : அக் 01, 2024 04:11 AM

பெ.நா.பாளையம் : கோவை மாவட்டம், சின்னதடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மண் தோண்டவோ, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மண் எடுத்துச் செல்லவோ கூடாது என, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதை மீறி, லாரி உள்ளிட்ட வாகனங்களில் மண் எடுத்துச் செல்வது தெரிந்தால், போலீசார் வழக்கு பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், எண் 24, வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி தெக்கலுார் பகுதியில் எஸ்.ஆர்., ஜங்கிள் ரிசார்ட்ஸ் உரிமையாளர் சந்தோஷ் மற்றும் அவரது மனைவி மோட்ச பிரியா ஆகியோருக்கு பாத்தியப்பட்ட, 24 ஏக்கர் பட்டா பூமியில் மண் தோண்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட நீதிபதி நாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், கோவை எஸ்.பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர், 24 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் அதையொட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலம், ரிசர்வ் பாரஸ்ட், யானைகள் வழித்தடம் மற்றும் நீர்வழி பாதை ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின் நீதிபதி மற்றும் அதிகாரிகளை சந்தித்த ஆனைகட்டி பழங்குடியினர், மண் தோண்டப்பட்டுள்ள, 24 ஏக்கர் பூமியில், தங்களுக்கு சொந்தமான நிலங்கள் அதில் உள்ளன.
அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், நிலத்தின் அருகே உள்ள கொடிக்கால் பள்ளம், தடுப்பணைகள் சமன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் மிரட்டப்படுவதாகவும், எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதே போல பழங்குடியினர் பலரும் புகார் கூறியதால், ஆனைகட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பழங்குடியினரை சந்தித்த நீதிபதி நாராயணன், கலெக்டர் கிராந்தி குமார் குறைகளை கேட்டனர்.