கடும் வெயிலில் பறக்கும் வாகனங்கள்... கவனிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்!
கடும் வெயிலில் பறக்கும் வாகனங்கள்... கவனிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்!
UPDATED : மே 02, 2024 05:05 AM
ADDED : மே 01, 2024 11:02 PM

வெப்ப அலை வீசுகிறது; வீட்டை விட்டே வெளியே செல்லாதீர்கள் என்று, ஒரு மாநிலத்தின் முதல்வரும், மாவட்ட கலெக்டரும் அறிக்கை கொடுப்பதெல்லாம் இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் எல்லாத் தலைமுறைக்கும் புதிய விஷயமாக இருக்கிறது.
ஆனால் குழந்தைகளுக்கு விடுமுறைக் காலம்; சுற்றுலா, சொந்த ஊர் பயணம் எல்லாவற்றையும் இப்போது தான் திட்டமிட வேண்டியுள்ளது.
அதிலும் சொந்தமாக கார்கள் வைத்திருப்பவர்கள், விடுமுறைக் காலங்களில் சுற்றுலா செல்வதற்கும், சொந்த ஊர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஊர்களுக்குச் செல்வதற்கு கொஞ்சமும் யோசிப்பதில்லை.
பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்று, இரவில் பயணத்தைத் திட்டமிட்டால், சமீபகாலமாக நடக்கும் விபத்துக்கள், உயிரிழப்புகள், இரவுப் பயணத்தை யோசிக்க வைக்கின்றன. இதன் காரணமாக, பெரும்பாலானோர், பகல் நேரங்களில் பயணங்களை மேற்கொள்கின்றனர். காலை 9:00 மணிக்குள் பயணம் செல்வதில் பெரிதாக பிரச்னை இருப்பதில்லை.
டயர் வெடித்து, பஞ்சர் ஆகி...
அதற்கு மேலாகி விட்டால், வெயில் வெளுத்து வாங்குகிறது. எந்த ரோட்டில் சென்றாலும், பல இடங்களில் டயர் வெடித்து, பஞ்சர் ஆகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதையும், விபத்துக்குள்ளாவதையும் பார்க்க முடிகிறது.
தற்போதுள்ள கோடை வெயிலின் தாக்கத்தில் பகல் நேரப் பயணங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பல இருக்கின்றன.
அதைப் பற்றி விளக்குகிறார், கார் மெக்கானிக் ஜெயக்குமார்: பயணத்துக்கு முன், முதலில் கவனிக்க வேண்டியது, டயரின் நிலை தான். கோடையில் ரோட்டின் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். அதனால் டயரில், சாதாரண காற்றை 30 என்ற அளவில் வைத்தால், அது பிரஷரில் 35 ஆகி, டயர் அதிகமாக சூடாகி விடும்.
நைட்ரஜன் மந்தமான வாயு என்பதால், அதே அளவிலேயே இருக்கும். சாதா காற்றில் ஈரப்பதம் இருக்கும்; டியூப்லெஸ் டயரில் ஈரம் கசிந்து, டிஸ்க் துருப்பிடிக்கும். நைட்ரஜன் நிரப்பினால் அந்தப் பிரச்னையில்லை.
அதேபோல, இன்ஜினுக்கு கடினப்பளு கொடுக்காமல் வாகனத்தை, 'ஜென்டில்' ஆக இயக்க வேண்டும். வெயிலில், 80லிருந்து 100 கி.மீ., வேகத்துக்குள் போவது நல்லது.
பயணத்துக்கு முன், வாகனத்தில் எல்லாவற்றையும் ஒரு முறை, முக்கியமாக ரேடியேட்டரை சரி பார்ப்பது அவசியம். அதில் 'கூலன்ட்' அளவை கவனிப்பது மிக முக்கியம்.
ஓட்டை எதுவும் இருக்கிறதா, பேன் பெல்ட் சரியாகவுள்ளதா என்று கவனிக்க வேண்டும். பழைய கார்களில் வெறும் தண்ணீர் மட்டுமே ஊற்றப்படும்; தண்ணீர் 100 டிகிரிக்கு மேல் வெப்பத்தில், ஆவியாகி விடும்; ஜீரோ டிகிரியில் 'ப்ரீஸ்' ஆகிவிடும்.
ஆனால், 'கூலன்ட்'களில் 'எத்திலின் க்ளைகால்' தண்ணீருடன் கலப்பதால், 130 டிகிரி வரை ஆவியாகாது. மைனஸ், 17-30 டிகிரி வரையும் கூட, 'ப்ரீஸ்' ஆகாது.
வண்டியை ஓட்டும்போது, டெம்பரேச்சரை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். கோடையில் ஏ.சி., இல்லாமல் வண்டியை இயக்க வேண்டாம்.
கார் என்ற குறியீட்டுக்குள் 'சி' என்ற வடிவம் இருப்பது போன்று, ஏ.சி., வைத்துக் கொள்ள வேண்டும். மோட்டார் வாகனச்சட்ட விதிகளுக்கு உட்பட்டு (50 ஜி.எம்.எஸ்.,) 'சன் பிலிம்' ஒட்டிக் கொண்டால், ஏ.சி., கூலிங் குறையாது; வெளியே போகாது.
சீட்களில் பாசிகள் மற்றும் மார்பிள் கொண்ட உறைகளைப் போட்டு அமர்ந்தால், காற்றோட்டம் இருக்கும்; சூடு ஏறாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கோடையில் பயணங்களைத் தவிர்க்க இயலாதவர்கள், இந்த பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது, உங்கள் பயணங்களை இனிதாக்கும்!
-நமது நிருபர்-

