'அதிகார மமதையை தகர்த்தெறிவோம்': 'தினமலர்' கார்ட்டூனுக்கு அழகிரி விளக்கம்
'அதிகார மமதையை தகர்த்தெறிவோம்': 'தினமலர்' கார்ட்டூனுக்கு அழகிரி விளக்கம்
ADDED : ஆக 07, 2025 06:53 AM

சென்னை: ''சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தகர்த்தெறிவோம் என, நான் கூறவில்லை. அதிகார மமதையை தகர்த்தெறிவோம் என்ற பொருள்படும்படிதான் கூறினேன்'' என, 'தினமலர்' நாளிதழ் கார்ட்டூனுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை மாநகர காவல் துறையை நான் விமர்சித்து பேசியதை மையப்படுத்தி, நேற்று 'தினமலர்' நாளிதழில் கார்ட்டூன் எனப்படும், கேலிசித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் நான் நடத்திய, ரயில் மறியல் போராட்டம் திட்டமிடாதது; அது தற்செயலாக நடந்தது. நான் கும்பகோணத்தில் இருந்து சென்னை வருவதற்காக, கடந்த 2023 மார்ச் 22ல், கும்பகோணத்தில் ரயிலுக்காக காத்திருந்தேன்.
அப்போது, எம்.பி.,யாக இருந்த ராகுலை தகுதி நீக்கம் செய்துள்ளதாக, தகவல் கிடைத்தது.
உடனே அதை கண்டித்து, ஏதேனும் ஒரு வகையில், என் எதிர்ப்பை காட்ட வேண்டும் என, எண்ணினேன். அந்த நேரம் நான் செல்ல வேண்டிய ரயில் வந்தது. உடனே, எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய, நானும், என்னுடன் வந்திருந்த சில தொண்டர்களும், ரயில் முன் மறியல் செய்தோம். அந்த இடத்தில், என்னுடைய போராட்ட உணர்வுதான் முக்கியமே தவிர, எத்தனை நபர்களுடன் சென்றேன் என்பது முக்கியமல்ல. போராட்ட உணர்வே முக்கியம்.
'சென்னை மாநகர போலீஸ் அலுவலகத்தை தகர்த்தெறிவோம்' என்று, நான் கூறவில்லை. மாறாக, அவர்களின் அதிகார மமதையை தகர்தெறிவோம் என்ற பொருள்படவே கூறினேன். காங்கிரஸ் வன்முறையில் நாட்டமில்லாத சித்தாந்தத்தை கொண்ட கட்சி. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.