கட்டுமான தொழிலாளர் நல நிதி பெயரில் வசூல் வேட்டை; உள்ளாட்சிகள் அடாவடியால் மக்கள் தவிப்பு
கட்டுமான தொழிலாளர் நல நிதி பெயரில் வசூல் வேட்டை; உள்ளாட்சிகள் அடாவடியால் மக்கள் தவிப்பு
ADDED : ஆக 11, 2025 03:25 AM

சென்னை : கட்டட அனுமதி வழங்கும் போது, கட்டுமான தொழிலாளர் நல நிதிக்காக, 1 சதவீத தொகையை வசூலிப்பதற்கு பதிலாக, சதுர அடிக்கு, 22 ரூபாய் என, உள்ளாட்சி அமைப்புகள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, கட்டுமான பணிகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் போது, அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான நலத்திட் டங்கள் அவசியமாகின்றன.
சட்டம் இயற்றப்பட்டது இதற்காக, கட்டுமான தொழிலாளர் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வாரியத்தின் நிதி ஆதாரத்துக்காக, ஒவ்வொரு கட்டுமான திட்டத்தை செயல்படுத்துவோரும், அதன் மொத்த மதிப்பில், 1 சதவீத தொகையை, தொழிலாளர் நல நிதியாக வழங்க வேண்டும் என, சட்டம் இயற்றப்பட்டது.
இவ்வாறு வசூலாகும் நிதியை பயன்படுத்தி, கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதன் மொத்த மதிப்பில், 1 சதவீத தொகை என கணக்கிட்டால், அதிக செலவு ஏற்படுவதாக கருதின.
அதனால், கட்டுமான பணி மதிப்பை குறைவாக காண்பித்து, குறைந்த தொகையை மட்டுமே வாரியத்துக்கு செலுத்துவது, 2017 முதல் 2022 வரையிலான கணக்குகளை தணிக்கை செய்ததில் கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் துணையுடன், இந்த மோசடி நடப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், கட்டுமான தொழிலாளர் நல நிதியை முறையாக, முழுமையாக வசூலிக்க உத்தரவுகள் பிறப்பித்தனர்.
அதன்படி பெரிய நிறுவனங்களிடம் கிடுக்கி போடுவதற்கு பதிலாக, சாதாரண வீடு கட்டுவோ ரிடம், அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர்.
புதிய வழிமுறை இதுகுறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
கட்டுமான திட்டங்களின் மொத்த மதிப்பில், 1 சதவீத அளவுக்கு மட்டுமே, தொழிலாளர் நல நிதியாக வசூலிக்க வேண்டும். பல இடங்களில் உள்ளாட்சி அதிகாரிகள், சதுர அடிக்கு இவ்வளவு என, புதிய வழிமுறையில் கணக்கு போடுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, சிறு நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு, அனுமதி கட்டணம் சதுர அடிக்கு, 15 முதல், 27 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
ஆனால், கட்டுமான தொழிலாளர் நல நிதிக்காக, சதுர அடிக்கு, 22 ரூபாய் வீதம் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் வசூலிக்கின்றனர்.
இதனால், கட்டுமான திட்ட அனுமதிக்கான கட்டணங்களின் மொத்த தொகைக்கு இணையாக அல்லது அதை விட அதிகமான தொகையை, தொழிலாளர் நல நிதியாக மக்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, 1,000 சதுர அடிக்கு ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், அதற்கான கட்டுமான பணி மதிப்பாக, 15 லட்சம் ரூபாய் கட்டுவார்.
நடவடிக்கை தேவை இதில், 1 சதவீதம் என்ற அடிப்படையில், அவர் தொழிலாளர் நல நிதியாக, 15,000 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால், சதுர அடிக்கு, 22 ரூபாய் என்ற அடிப்படையில், 22,000 ரூபாயை உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கின்றனர்.
பெரிய நிறுவனங்களிடம் முறையாக வசூலிக்காத உள்ளாட்சி அமைப்புகள், சிறிய அளவில் வீடு கட்டும், சாதாரண மக்களை வாட்டி எடுப்பது ஏன். உயர் அதிகாரிகள் இதில் மவுனத்தை கைவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுமான மதிப்பில், 1 சதவீதம் வசூலிப்பதற்கு பதிலாக, சதுர அடி அடிப்படையில் கட்டணங்கள் வசூலிப்பது குறித்து புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி