மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி துவக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி துவக்கம்
ADDED : ஏப் 11, 2024 04:34 AM

கோவை : கோவையில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி நேற்று துவங்கியது.
கோவை லோக்சபா தொகுதியில், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இம்முறை, 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மூன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்கு தேவையான, 4,926 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1,642 'விவி பேட்' இயந்திரங்கள், 1,642 கன்ட்ரோல் யூனிட்டுகள், அந்தந்த சட்டசபை தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூமில்' இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
'ரிசர்வ்' அடிப்படையில், 1,005 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
இதில், பல்லடம் தொகுதிக்கு - 1,251, சூலுார் - 996, கவுண்டம்பாளையம் - 1,305, கோவை வடக்கு - 900, கோவை தெற்கு - 753, சிங்காநல்லுார் - 972 எண்ணிக்கையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், வேட்பாளரின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய 'பேலட் ஷீட்' பொருத்தப்படுகிறது.
இப்பணி, அந்தந்த சட்டசபை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று துவங்கியது. ரங்கநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகத்தில், கோவை தெற்கு தொகுதியில் பயன்படுத்த உள்ள இயந்திரங்களில் 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வசுரபி தலைமையில் நடந்தது.
முதலில், இருப்பு அறையில் இருந்து இயந்திரங்கள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு, அதிலிருந்த 'பார்கோடு' ஸ்கேன் செய்யப்பட்டது. அதில், கம்ப்யூட்டர் முறையில் குலுக்கல் நடத்தியபோது, ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடி எண் மற்றும் பள்ளி கட்டடம் போன்ற விபரங்கள் தெரிந்தது.
அத்தகவல் பிரிண்ட் செய்யப்பட்டு, இயந்திரத்தில் ஒட்டப்பட்டது. பின், 'பேலட் ஷீட்' ஒட்டப்பட்டது. இப்பணிகளை, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு, அறிவுரை வழங்கினார்.
இனி, மூன்று இயந்திரங்களுக்கும் இணைப்பு கொடுத்து, தலா, 1,000 ஓட்டுகள் வீதம் மாதிரி ஓட்டு பதிவு செய்து, இயந்திரத்தின் செயல்பாடு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

