அறிவித்து நிறைவேற்றாத திட்டங்கள்; சமூக ஊடகங்களில் மோதல்
அறிவித்து நிறைவேற்றாத திட்டங்கள்; சமூக ஊடகங்களில் மோதல்
UPDATED : ஜன 24, 2024 08:06 AM
ADDED : ஜன 24, 2024 01:47 AM

கோவைக்கு எந்தெந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் அறிவித்து, எவை எவை செய்யப்படவில்லை என்பதைப் பட்டியலிட்டு, சமூக ஊடகங்களில் கடும் மோதல் உருவாகி வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், பழைய வாக்குறுதிகளின் பட்டியலும் துாசி தட்டப்படுகிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும்கட்சிகள், கோவையின் வளர்ச்சிக்கான எந்தெந்த திட்டங்களைச் செயல்படுத்தாமல் உள்ளன என்று பட்டியலிட்டு, மோதல் உருவாகியுள்ளது.
இதில், தி.மு.க., வாக்குறுதி கொடுத்து அல்லது அறிவித்து, நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து, ஒரு பட்டியல் கடந்த இரண்டு நாட்களாக, சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
'சாதனை' திட்டங்கள்
கடந்த மூன்றாண்டுகளில், தி.மு.க., ஆட்சியில், கோவையில் செய்யப்பட்டுள்ள 'சாதனைகள்' என்று கிண்டலாகக் குறிப்பிட்டு, 29 திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணி நிறுத்தம், மெட்ரோ ரயிலுக்கு நிதி ஒதுக்காதது, விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஒப்படைக்காதது ஆகியவை, முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. தாமதமாகும் திட்டங்கள் என்று ஒரு பெரும் பட்டியல் போடப்பட்டுள்ளது.
பில்லுார் 3வது குடிநீர்த் திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், எல்காட் ஐ.டி.,கட்டுமானப்பணி, உத்தேச நீலம்பூர் ஐ.டி.,பார்க், அன்னுார் தொழிற்பூங்கா, வாரப்பட்டி பாதுகாப்பு பூங்கா, 'மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்' நிலமெடுப்புப் பணி, உக்கடம் மேம்பாலம், நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் போன்ற திட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
மேம்பாலம் நீட்டிப்பில்லை
எல்காட் சிறப்புப் பொருளாதார மண்டல விரிவாக்கப் பணி டெண்டர் ரத்து, பல தரப்பில் கோரிக்கை விடுத்தும் அவினாசி ரோடு மேம்பாலத்தை நீட்டிக்காதது, பெயருக்கு அறிவிக்கப்பட்ட 'டெக் சிட்டி' பார்க், சிங்காநல்லுார், சாய்பாபா கோவில் மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்காதது, சங்கனுார் பள்ளம் மேம்பாட்டு திட்டம் நிறுத்தி வைப்பு என பல திட்டங்கள் அறிவிப்பாக மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய காய்கறி மார்க்கெட், சூலுார் ஏரோ பார்க், மின்சார வாகனத் தயாரிப்பு வசதி மையம் என, தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்னும், வந்த பின்னும் அறிவித்து, செயல்படுத்தப்படாத திட்டங்கள் பெரும்பாலும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலை வைத்து, தி.மு.க., அரசின் மீது கடுமையான விமர்சனங்களை, சமூகஊடகங்களில் பலரும் முன் வைத்துள்ளனர்.
தி.மு.க.,வினர் பதிலடி
இதற்குப் பதிலடியாக, மத்திய அரசு நிறைவேற்றாத திட்டங்களைப் பட்டியலிட்டு, தி.மு.க.,உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.
விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்காக, நிலத்தை ஏற்க மறுப்பது, கோவை ரயில் சந்திப்பை மேம்படுத்தாதது, தென் மாவட்டங்களுக்கான ஐந்து பழைய ரயில்களை மீண்டும் இயக்காதது உள்ளிட்ட, 15 விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளனர்.
நீண்ட கால கோரிக்கையான கோவை-துபாய் விமான சேவை, கோவை-பெங்களூரு இரவு நேர ரயில் சேவை, கிழக்கு புறவழிச்சாலை, கோவை-கரூர் பசுமை வழி, மேட்டுப்பாளையம் பை பாஸ், கோவை-சத்தி ரோடு விரிவாக்கம், 'எல் அண்ட் டி' பை பாஸ் விரிவாக்கத்தில் தாமதம், மலுமிச்சம்பட்டி சந்திப்பில் மேம்பாலம், பழைய அவினாசி ரோடு மேம்பால மேம்பாடு ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளனர்.
துரிதமாகுமா அரசுகள்?
இரு தரப்பு விமர்சனங்களையும் பார்ப்போருக்கு, கோவையைப் புறக்கணிப்பதில் தான் போட்டி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, சமூக ஊடகங்களில் துவங்கியுள்ள இந்த மோதல், இனி வரும் நாட்களில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இதை உணர்ந்து, சில திட்டங்களையாவது துரிதமாகத் துவக்கினால் நல்லது!
-நமது நிருபர்-

