இளைஞர் அணிக்கு ஐந்து 'சீட்': அமைச்சர் உதயநிதி பிடிவாதம்
இளைஞர் அணிக்கு ஐந்து 'சீட்': அமைச்சர் உதயநிதி பிடிவாதம்
ADDED : ஜன 29, 2024 05:30 AM

வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் இளைஞர் அணியைச் சேர்ந்தோருக்கு குறைந்தபட்சம் ஐந்து சீட்டுகள் கொடுக்க வேண்டும் என, அமைச்சர் உதயநிதி வலியுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 21ல், சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், 'லோக்சபா தேர்தலில் இளைஞர் அணியினருக்கு முக்கியத்துவம் வேண்டும். ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில், 'சீட்' கொடுத்த நீங்கள், இம்முறை கூடுதல் எண்ணிக்கையில் சீட் அளிக்க வேண்டும்' என்றார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின், 'வழக்கம்போல் இளைஞர் அணிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்' என்றார்.
லோக்சபா தொகுதிவாரியாக நடக்கும், கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் உதயநிதி, 'இளைஞர் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், ஒருங்கிணைந்து பணியாற்றுவீர்களா?' என கேட்கிறார். கோஷ்டி பூசல் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் இருந்து வரும் நிர்வாகிகளைக் கடிந்து கொள்வதோடு, எச்சரித்தும் அனுப்புகிறார்.
வரும் தேர்தலில் இளைஞர் அணி சார்பில், ஐந்து வேட்பாளர்களை போட்டியிட வைக்க முடிவெடுத்துதான், ஒருங்கிணைப்பு கூட்டத்தை, அமைச்சர் உதயநிதி மும்முரமாக நடத்துகிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில், திருவண்ணாமலை அண்ணாதுரை, தென்காசி தனுஷ்குமார் ஆகிய இருவரும் இளைஞர் அணியில் இருந்து, வேட்பாளராகக் களமிறக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் இளைஞர் அணி மாநில நிர்வாகிகளாக இருக்கும் துாத்துக்குடி ஜோயல், ஈரோடு மகேஷ், திருத்துறைப்பூண்டி இளையராஜா உள்ளிட்ட 5 பேரை வேட்பாளர் ஆக்கும் தீவிரத்தில் உதயநிதி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -