'பார்' அரசே பார்! ஊரெல்லாம் சாராய வாடை; சுகாதாரத்துக்கு பாடை
'பார்' அரசே பார்! ஊரெல்லாம் சாராய வாடை; சுகாதாரத்துக்கு பாடை
UPDATED : மார் 27, 2025 10:11 AM
ADDED : மார் 27, 2025 10:08 AM

டாஸ்மாக் மது விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்ததும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்ததும், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடை விவகாரம், இன்று, நேற்று மட்டுமல்ல... தேர்தல் நெருங்கும் போதெல்லாம், விவாத பொருளாகி விடுகிறது.
மகளிர் ஓட்டுகளை கவர்வதற்காக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என, இரு திராவிட கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தன. அதன்பின், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலை அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், மது விற்பனையில் இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இல்லை.
தற்போது, கோவை தெற்கு மாவட்டத்தில், 108 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. அதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 11 டாஸ்மாக் கடைகளும், ஆனைமலையில் 11 டாஸ்மாக் கடைகளும் செயல்படுகின்றன. இந்த கடைகள் பெரும்பாலும், 'பார்' உடன் செயல்படுகின்றன.
தற்போது, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அளவுக்கு, 'ரெக்கரேஷன் கிளப்' என்ற பெயரில், எப்.எல்.2 பார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எப்.எல்.2 பார்கள் நெடுஞ்சாலை அருகிலேயே அமைக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார்களில் ஆட்களை நியமித்து இல்லீகலாக, 'சரக்கு' விற்கின்றனர். இதற்கு தேவையான மது வகைகளை முந்தைய நாளே டாஸ்மாக் கடையில் வாங்கி, பாரில் இருப்பு வைத்து கொள்கின்றனர்.
இந்த இல்லீகல் வியாபாரம் எவ்வித தடையும் இன்றி, பகிரங்கமாக நடக்கிறது. இதற்காக, போலீஸ், கலால்துறை, டாஸ்மாக் அதிகாரிகளையும் ஆளும்கட்சியினர் 'கவனிப்பு' செய்கின்றனர். மேலிடத்தில் இருந்து பிரஷர் வரும் போது, கண்துடைப்புக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர்.
டாஸ்மாக் பார்களில், உடைந்த சேர்கள், சுத்தம் செய்யப்படாத மேஜைகள், கால்களுக்குள் புகுந்து ஓடும் பெருச்சாலிகள் என, எவ்வித பராமரிப்பும் இன்றி, சுகாதாரம் என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளன. அங்கு தடையை மீறி விற்கும் பிளாஸ்டிக் டம்ளர் முதல் அனைத்துக்கும் அவர்கள் கூறுவது தான் விலை.