நக்கீரருக்கு திருப்பரங்குன்றம் மலையில் ஜோதி பிழம்பாக காட்சி தந்த முருகன்
நக்கீரருக்கு திருப்பரங்குன்றம் மலையில் ஜோதி பிழம்பாக காட்சி தந்த முருகன்
ADDED : டிச 19, 2025 03:49 AM

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலையில் நக்கீரருக்கு, ஜோதி பிழம்பாக முருகன் காட்சி தந்தார். அந்த ஜோதியின் அடையாளமாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
தேவேந்திரன், மலை மேல் ஒரு கல்யாண மண்டபத்தையும், எல்லோரும் தங்குவதற்கு ஒரு மண்டபத்தையும், கோயிலையும் கட்டியதாக புராணம் கூறுகிறது'' என மதுரை வழக்கறிஞரும், அர்ச்சகருமான சங்கரன் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், நக்கீரருக்கு ஜோதி பிழம்பமாக முருகன் காட்சி தந்ததாலேயே அதன் அடையாளமாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்கிறார் சங்கரன்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையும், மலை மேல் தீர்த்தமும், சுனை, கோயிலும், தீபமும் முருகனுக்கே என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.
பதினெண் புராணத்தில் ஒன்றான, ஸ்ரீ ஸ்கந்த புராணம் திருப்பரங்குன்றம் ஸ்தலத்தின் புராணம். அதில் சங்கர சம்ஹிதையில் சிவரஹஸ்ய காண்டத்தில் சுப்ரமணியர் அவதாரம், காரணம், சரித்திரம் கூறப்படுகிறது.
இதிலிருந்து தான் பின்னாளில் முருகனின் வழிபாட்டை, பெருமையை பல நுால்கள் கூறுகின்றன. குறிப்பாக சுப்பிரமணிய பராக்ரமம், சுப்பிரமணிய தத்துவம் போன்ற பழமையான நுால்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
நக்கீரருக்கு ஜோதி வடிவில் காட்சி
தல புராணத்தில் திருப்பரங்குன்றம் மலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயர் இருந்துள்ளது. மலையே சிவலிங்க வடிவமாக இருக்கிறது. 14 விசேஷமான தீர்த்தங்கள் உள்ளன. அதில் மலையிலிருந்து 9 தீர்த்தங்கள் உற்பத்தியாகின்றன.
தமிழ்ச்சங்கத்தின் தலைமை புலவரான நக்கீரருக்கு சாப விமோசனம் அருளி பாதாள கங்கை எனும் தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி பின் அவருக்கு மலையின் மேல் மலை முகட்டில் ஜோதி ரூபமாக முருகன் காட்சி தந்தார். அதனால் மலை மேல் ஜோதியின் அடையாளமாக தீபம் ஏற்றப்பட்டது.
மலையில் மண்டபம்
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனுக்கு பிரம்மனால் தேர் செய்து திருவிழா எடுத்ததையும் புராணம் கூறுகிறது.
தேவேந்திரன், மலை மேல் ஒரு கல்யாண மண்டபத்தையும், எல்லோரும் தங்குவதற்கு ஒரு மண்டபத்தையும், கோயிலையும் கட்டியதாக புராணம் கூறுகிறது. அந்த மண்டபத்தின் எச்சங்கள் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டன.
பாண்டவர்கள் நீராடிய தீர்த்தம் ஒன்று உள்ளதாகவும், அவர்கள் ஒரு மாத காலம் தங்கியிருந்தாகவும், ராமபிரான் வந்து வழிபட்டதாகவும் நுால்கள் வழியாக அறிய முடிகிறது.
சுவாமி சுப்பிரமணியர் புரோகிதராக வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு ஒரு விவாஹ விதியை உருவாக்கி பிரம்மாவை வைத்து வேள்வி நடத்தியதால் அவருக்கு 'புரோகித மூர்த்தி' எனும் பெயரும் உள்ளதாக கடம்பவன புராணத்தில் குறிப்பிடப் படுகிறது.
பிற்காலங்களில் வந்த சில மதங்களின் அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் பிறநாட்டு அரசர்களின் படையெடுப்புகளால் ஏற்பட்டவை என்று அறியமுடிகிறது.
மதசுதந்திரத்திற்கு எதிரானது ஹிந்து உரிமைகள் ஒவ்வொரு முறையும் அக்னிப் பரீட்சை செய்து பார்த்து தான் உரிமை போராட்டம் நிறைவேறுகிறது. அரசியலமைப்பு சாசனத்தில் மதஉரிமை பாதுகாக்கப்படுகிறது.
அதிலும் ஒவ்வொரு கோயிலிலும் அதன் மதச்சடங்குகள், பூஜைகள் வழிபாடுகள் சார்ந்த விஷயங்களில் அரசோ, கோயில் நிர்வாகமோ தலையிட உரிமையில்லை என பல வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் தீபம் எங்கே எப்படி யாரால் ஏற்றப்பட வேண்டும் என்பதை கோயில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுவது மத சுதந்திரத்திற்கு எதிரானது.
அதை ஆகமத்தில் தகுதியுள்ள அர்ச்சகர்கள் தான் முடிவு செய்ய முடியும். இவ்வாறு கூறினார்.

