/
செய்திகள்
/
ப்ரீமியம்
/
நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மதுரை எம்.பி., வெங்கடேசன்: பதவியை பறிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கொதிப்பு
/
நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மதுரை எம்.பி., வெங்கடேசன்: பதவியை பறிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கொதிப்பு
நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மதுரை எம்.பி., வெங்கடேசன்: பதவியை பறிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கொதிப்பு
நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மதுரை எம்.பி., வெங்கடேசன்: பதவியை பறிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கொதிப்பு
ADDED : டிச 03, 2025 06:19 AM

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று (டிச., 3) கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதுதொடர்பான வழக்கில் நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை மறைமுகமாக விமர்சித்து மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் கருத்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உன்னை போல் முட்டாள் இல்லை
திருப்பரங்குன்றம் மலை யாருடையது என்ற விவகாரத்தில் 'குன்றம் குமரனுக்கே' என ஹிந்துக்கள் ஒன்றுகூடி ஒற்றுமையை நிலைநாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 25ல் மதநல்லிணக்க கூட்டமும், மார்ச் 9ல் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கேட்டு இரு வேறு அமைப்புகள் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தன. விசாரித்த நீதிபதி தனபால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என குறிப்பிட்டு அனுமதி மறுத்தார்.
இதைதொடர்ந்து மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மார்ச் 9ல் நடந்த உள்ளரங்கு மாநாட்டில் பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசன், 'உனக்கு தேவையான தீர்ப்பை எழுதி கொடுத்துவிட்டு, நாளை ஓய்வுபெற்ற பின் ஒரு மாநிலத்தின் கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம். தீயை பற்ற வைப்பவனும், தீயை அணைப்பவனும் ஒன்று என்று சொன்னால் உன்னை போல முட்டாள் இந்த உலகில் இல்லை' என நீதிபதியை மறைமுகமாக சாடினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாற்காலியில் அமர்ந்து அமல்
இதைதொடர்ந்து உள்ளூர் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டு மத்திய அரசை குற்றம் சொல்லும் வகையிலான பிரச்னைகளை கையில் எடுத்து விமர்சித்து வந்தார் எம்.பி., இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் வெங்கடேசன், 'கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லா வகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு உண்டு. ஹிந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்' என நீதிபதியை மறைமுகமாக விமர்சித்து கருத்து வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வெங்கடேசனுக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. 'புதுடில்லியில் பதுங்கிக் கொண்டுள்ள வெங்கடேசன் மதுரை வரும்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்' என ஹிந்து உணர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
எம்.பி., பதவியை பறிக்க வேண்டும்
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: எம்.பி., வெங்கடேசன் நீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் நோக்கிலும், நீதிபதியை ஜாதி, மத சாயம் பூசியும், கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார்.
மதுரை குப்பை நகரானதையும், ஊழல் மலிந்து விட்ட மாநகராட்சியையும் கண்டிக்க துப்பில்லாத வெங்கடேசன், சம்பந்தமே இல்லாத திருப்பரங்குன்றம் தொகுதியில் மூக்கை நுழைத்துக் கொண்டு, தர்ஹா நிர்வாகமே அமைதி காக்கும் நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை பற்றி கவலைப்படுவது ஏன்.
வெங்கடேசன் ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை மேல் ஆடு, கோழி பலியிடக் கூடாது என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளையும் அவமானப்படுத்தி பேசியது போல், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் அவமானப்படுத்தியுள்ளார். இவரது செயல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதவி பிரமாணத்திற்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்பு, நீதிபதிகள் மீது அவதுாறு பரப்பும் வெங்கடேசனின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும்.
மத ஒற்றுமைக்கு முன் உதாரணமாக விளங்கும் திருப்பரங்குன்றம் மக்களிடையே மத கலவரத்தை துாண்டும் வகையில் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஹிந்து மத வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

