அடுத்தடுத்து மூடுவிழா காணும் தியேட்டர்கள்: அடையாளத்தை இழக்கும் மதுரை
அடுத்தடுத்து மூடுவிழா காணும் தியேட்டர்கள்: அடையாளத்தை இழக்கும் மதுரை
ADDED : பிப் 21, 2025 05:25 AM

மதுரை:
'கலை வளர்ந்ததும்
இங்கேதான்
காதல் சொன்னதும்
இங்கேதான்
கட்சி வளர்ந்ததும்
ஆட்சி புடிச்சதும்
இந்த சினிமா(தியேட்டர்)தான்'
என வாழ்வியலோடு கலந்த சினிமாவை, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்த்தது தியேட்டர்கள்தான். மதுரையைச் சேர்ந்த பலர் இன்று சினிமாவில் 'ஸ்டார்களாக' வலம் வர காரணமும் இந்த சினிமா தியேட்டர்கள்தான்.
ஊரின் அடையாளமாக, நட்புகள், உறவுகளை சந்திக்கும் இடமாக, பொழுதுபோக்கும் இடமாக இருந்த தியேட்டர்கள், அசுரனாக வளர்ச்சியடைந்த நவீன தொழில்நுட்பங்களோடு போட்டியிட முடியாமல் மூடுவிழா கண்டு வருகின்றன.
சில தியேட்டர்களை கார்ப்பரேட் கம்பெனிகள் குத்தகைக்கு எடுத்து புதிய பெயர்களில் நடத்தி வருகின்றன. சில தியேட்டர்கள் ஜவுளி கடைகளாக, வணிக வளாகங்களாக, அபார்ட்மென்ட்களாக மாறிவிட்டன.
அந்த வரிசையில் இணைய உள்ளது மதுரை அண்ணாநகரில் உள்ள அம்பிகா, மூகாம்பிகா தியேட்டர்கள். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இத்தியேட்டர்கள் வணிக வளாகமாக மாறப்போகிறது.
மதுரையில் ஏற்கனவே நடனா, நாட்டியா, நர்த்தனா, இந்துமதி, தினமணி தியேட்டர்கள் குடியிருப்பாகவும், வணிக இடமாகவும் மாறிவிட்டன. வெள்ளைக்கண்ணு, அபிராமி, அம்பிகை தியேட்டர்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.
ஆசியாவிலேயே பெரியது
ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் என பெருமை கொண்ட மதுரை தங்கம் தியேட்டர் இன்று ஜவுளி ஷோரூமாகி விட்டது. மதுரை நகரின் முதல் தியேட்டரான தெற்குமாசிவீதி 'சிட்டி சினிமா' தியேட்டர் பார்க்கிங் இடமாகவும், வணிக இடமாகவும் மாறிவிட்டது. இங்கு திரையிடப்பட்ட 'சிந்தாமணி' படம் மூலம் கிடைத்த வருவாயில் கீழவெளிவீதியில் சிந்தாமணி தியேட்டர் கட்டப்பட்டது. அந்த தியேட்டர் இருந்த இடம் இன்று ஜவுளி ஷோரூமாக மாறிவிட்டது.
மீனாட்சி, ராம்விக்டோரியா, நியூடீலக்ஸ் போன்ற சில தியேட்டர்கள் செயல்படாமல் பாழடைந்து வருகின்றன. இதுபோன்று எத்தனையோ தியேட்டர்கள் மதுரையின் அடையாளமாக இருந்தன. அவை அழிந்துவிட்ட நிலையில், மீதமிருக்கும் சில தியேட்டர்களும் 'வளர்ச்சி' என்ற பெயரில் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.
தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
முன்பெல்லாம் மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் படம் சரியாக போகவில்லை என்றாலும் போட்ட முதலீட்டை ஓரளவு எடுத்துவிடலாம். இன்று சூழ்நிலைகள் மாறிவிட்டன. ஓ.டி.டி., தளங்கள் வரவால் தியேட்டர்களில் ஒருவாரம் படம் ஓடுவதே பெரிய விஷயம்.
சினிமா தயாரிப்பாளர்கள் தாங்கள் செலவு செய்த தொகையை 'டிவி' சேனல்கள், ஓ.டி.டி., தளங்களில் விற்று நஷ்டத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்கிறார்கள். ஆனால் எங்கள் நிலைமை வேறு.
மின்கட்டணம், வேலையாட்கள், சொத்து வரி என பல சிரமங்களை தாண்டி டிக்கெட் விற்றும் லாபம் கிடைப்பதில்லை. அதனால் தான் பலரும் தியேட்டர் தொழிலை கைவிட்டு வருகிறார்கள் என்றனர்.