ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் 'டாப்' 10 மாவட்டங்களில் மதுரை முதலிடம்
ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் 'டாப்' 10 மாவட்டங்களில் மதுரை முதலிடம்
ADDED : செப் 26, 2024 05:05 AM

மதுரை: தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் 'டாப்' 10 மாவட்டங்களில் மதுரை முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 394 கிராமங்களில் தென்மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு போலீஸ் சமூகநீதி மனிதஉரிமை பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தாண்டு மார்ச் வரை போலீஸ் சமூகநீதி மனித உரிமை பிரிவு அறிக்கைபடி, தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் என அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 394.
இதில் 45 கிராமங்களுடன் மதுரை முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக 29 கிராமங்களுடன் திருநெல்வேலி, 24 கிராமங்களுடன் திருச்சி 3வது இடம், 22 கிராமங்களுடன் தஞ்சாவூருக்கு 4வது இடம், 20 கிராமங்களுடன் தேனி 5வது இடத்தில் உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இப்பிரிவு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினாலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 335 கூட்டங்கள் நடத்தினாலும் ஜாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விபரங்களை பெற்றுள்ள மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் நமது நிருபரிடம் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்தாண்டு விழிப்புணர்வு கூட்டங்கள் அதிகம் நடத்தப்பட்டன. ஆனாலும் வன்கொடுமைகள் நடக்கும் கிராமங்களை சமூகநல்லிணக்க கிராமங்களாக மாற்றமுடியாத சூழல் நிலவுகிறது.
இதற்கு தீர்வுகாண ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை, போலீஸ் சமூக நீதி மனிதஉரிமைகள் பிரிவு, சமூக நலத்துறை இணைந்து ஜாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். அடையாளப்படுத்தப்பட்ட 394 கிராமங்களில் 'ரோல் மாடல்' நல்லிணக்க கிராமங்களை உருவாக்கி ஊக்கப்பரிசு வழங்க வேண்டும் என்றார்.

