மகிளா காங்., மாநில தலைவி நிகழ்ச்சி; சொந்த கட்சியினர் எதிர்ப்பால் கடும் குழப்பம்
மகிளா காங்., மாநில தலைவி நிகழ்ச்சி; சொந்த கட்சியினர் எதிர்ப்பால் கடும் குழப்பம்
ADDED : ஆக 20, 2025 04:08 AM

மதுரை : மதுரையில், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில தலைவி சையத் ஹசீனாவுக்கு, நகர் காங்., நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, கட்சி கொடிகள், பேனர்களை அகற்றினர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடந்தது.
தமிழக காங்., துணை அமைப்புகளில் ஒன்றான மகிளா காங்கிரசுக்கு, மாநில தலைவியாக சையத் ஹசீனா ஓராண்டுக்கு முன் பதவிக்கு வந்தார். மாவட்டம் வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த உத்தரவிட்டார்.
யார் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர் சேர்த்துள்ளனரோ, அவர்களுக்கு மாவட்ட தலைவி பதவி வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதன்படி செயல்பட்ட மதுரை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிய மாவட்ட தலைவியரை அறிவித்தார்.
காங்., மாவட்ட தலைவர்களின் ஒப்புதல் இல்லாமல், இப்படி மாவட்ட தலைவிகளை அறிவித்து வருவதால், 'கட்சி நிகழ்ச்சிகளில் புதிதாக நியமிக்கப்படும் மகிளா காங்., நிர்வாகிகளை அழைக்க மாட்டோம்' என பெரும்பாலான காங்., மாவட்ட தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் மாவட்ட தலைவியாக தேர்வு செய்யப்பட்ட கமலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சையத் ஹசீனா வந்தார்.
போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு, தமிழ்நாடு ஹோட்டலில் பதவியேற்பு நிகழ்ச்சியை ஹசீனா, நடத்தினார். இருப்பினும், நிகழ்ச்சியின் போது குழப்பம் விளைவிக்கப்பட்டது.
நகர் காங்., நிர்வாகிகள் கூறியதாவது:
மதுரையில் உறுப்பினர் சேர்க்கை அடிப்படையில், 350 நபர்களை சேர்த்துள்ளதாக கூறி கமலாவிற்கு பதவி வழங்கியுள்ளார் ஹசீனா. ஆனால், அவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 20 பெண்கள் கூட வரவில்லை.
மாநிலம் முழுதும் போலியாக உறுப்பினர் எண்ணிக்கையை காட்டி பேரம் அடிப்படையில் புதிய பதவிகள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலான மாவட்டங்களில், மகிளா காங்., நிகழ்ச்சிகளை மாவட்ட காங்., நிர்வாகிகள் புறக்கணித்து வருகின்றனர்.
மதுரை நிகழ்வு குறித்து, மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் புகார் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.