கட்சி ஆரம்பித்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய மல்லை சத்யா
கட்சி ஆரம்பித்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய மல்லை சத்யா
ADDED : நவ 22, 2025 02:40 AM

மதுரை: 'ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று முன்தினம் ஆரம்பித்த, 'திராவிட வெற்றிக்கழகம்' கட்சியின் பெயர் எங்களுடையது. முறையாக பதிவு செய்து ஓராண்டாக பயன்படுத்தி வருகிறோம். பெயரை மாற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தி.வெ.க., நிறுவன தலைவர் கே.பி. சரவணன் எச்சரித்துள்ளார்.
ம.தி.மு.க., உட்கட்சி பிரச்னையால் நீக்கப்பட்ட மல்லை சத்யா, நேற்று முன்தினம் 'திராவிட வெற்றிக்கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்தார். கொடியையும் அறிமுகப்படுத்தினார். கட்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே அவருக்கு பிரச்னை துவங்கியுள்ளது.
கூடங்குளம்
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தேசிய தொழிலாளர் அறக்கட்டளை நிறுவனர் கே.பி. சரவணன், கடந்தாண்டு மே 1ம் தேதி, திராவிட வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்து நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
நான் 1996 முதல் 2007 வரை ம.தி.மு.க.,வில் பல்வேறு பொறுப்பில் இருந்தேன். தென்மாவட்ட தொழிலாளர்களுக்காக ஒரு அமைப்பு வேண்டும் என்ற நோக்கில் கட்சியில் இருந்து வெளியேறி, 'தென்னாடு முன்னேற்ற கழகம்' ஆரம்பித்தேன்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பலரும் போராடியபோது, நாங்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தோம்.
பின்னர் 2010ல் 'தேசிய தொழிலாளர் அறக்கட்டளை' என்ற பெயரில் பதிவு செய்தோம். கடந்தாண்டு மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று 'திராவிட வெற்றிக்கழகம்' என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்து இயங்கி வருகிறோம்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில் மல்லை சத்யா எங்கள் கட்சி பெயரை அப்படியே பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். தேர்தல் கமிஷனிடம், எங்கள் கட்சியை பதிவு செய்ய உள்ளோம்.
எங்களை சமரசம் செய்யும் நோக்கில் மல்லை சத்யா தரப்பினர் அணுகினால், அதை ஏற்கப்போவதில்லை. கட்சி பெயரை மாற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

