பழனிசாமியிடம் 12 'சீட்' கேட்ட வாசன்: பா.ஜ.,வுடன் பேசலாம் என நழுவல்
பழனிசாமியிடம் 12 'சீட்' கேட்ட வாசன்: பா.ஜ.,வுடன் பேசலாம் என நழுவல்
ADDED : நவ 20, 2025 01:12 AM

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா., தலைவர் வாசன், சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசிய போது, த.மா.கா., வுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக அக் கட்சி வட்டாரங்கள் கூறின.
த.மா.கா., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளாகவே, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வோடு த.மா.கா., இணக்கமாக இருந்து வருகிறது. இரு கட்சிகளின் கூட்டணியில் இருந்தே, தேர்தல்களை சந்தித்து வருகிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகிச் சென்று, இரு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணியை ஏற்படுத்தின.
அப்போது, தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை, வாசனுடன் பேச்சு நடத்தி, த.மா.கா.,வை பா.ஜ., கூட்டணியில் இடம் பெற வைத்தார். போட்டியிட்ட இடங்களில் தோல்வி அடைந்தாலும், பா.ஜ., கூட்டணியிலேயே வாசன் தொடர்கிறார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில், வலுவான தி.மு.க., கூட்டணியை தோற்கடிப்பதற்கு, மீண்டும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைய வேண்டும் என வாசன் சொல்லி வந்தார். மேலும், இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் பணியையும் செய்து வந்தார். டில்லி மேலிட பா.ஜ., தலைவர்களை சந்தித்து, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அவருடைய தொடர்ச்சியான வற்புறுத்தல்களுக்குப் பின், மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை கடந்த ஏப்ரலில் உருவாக்கினார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் இருந்த த .மா.கா.,வும், அ.தி.மு.க ., - பா.ஜ., கூட்டணியில் இணைந்தது.
இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இடம் பெறும் த.மா.கா.,வின் நிலை குறித்து அறிய விரும்பிய வாசன், இரு நாட்களுக்கு முன் சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் அரைமணி நேரத்துக்கும் அதிகமாக பேசினர்.
மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா.,வுக்கு 12 இடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வாசன் வைத்துள்ளார். அதற்கு, 'பா.ஜ., தலைமையுடன் பேசி முடிவெடுக்கலாம்' என பழனிசாமி கூறியுள்ளார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் - .

