UPDATED : ஏப் 25, 2023 12:26 AM
ADDED : ஏப் 25, 2023 12:23 AM

ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியலுக்கு எதிராக, அதிருப்தி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, 'மறுமலர்ச்சி திராவிட ஜனநாயக கழகம்' என்ற புதிய கட்சியை துவக்க உள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச்சில், ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் பதவி, வைகோவின் மகன் துரைக்கு வழங்கப்பட்டது. இதற்கு, அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் செவந்தியப்பன், சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கட்சியில் இருந்து மூவரையும், பொதுச்செயலர் வைகோ நீக்கினார்.
மேலும் சில மாவட்ட செயலர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், உட்கட்சி தேர்தலில் ஜாதி ரீதியாக ஓரம் கட்டப்பட்டவர்களும் அதிருப்தியில் உள்ளனர். மே 6ல், ம.தி.மு.க., 30வது ஆண்டு விழா துவங்குகிறது.
அதற்கு முன் அதிருப்தியாளர்கள் அனைவரும், அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கோவையில் ஒன்றிணைந்து, புதிய கட்சியை துவக்க உள்ளனர்.
இது குறித்து, ம.தி.மு.க., அதிருப்தி நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க.,வில் வாரிசு அரசியலை எதிர்த்து வெளியேறி, ம.தி.மு.க.,வை வைகோ உருவாக்கினார். அவருக்காக ஆறு பேர் தீக்குளித்து இறந்தனர். தியாக நெருப்பு வேள்வியில் உருவான ம.தி.மு.க.,வில், வைகோவின் வாரிசு துரை திணிக்கப்பட்டு உள்ளார்.
இதனால், மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட ஜாதிக் கட்சியாக, துரை வைகோ மாற்றிவிட்டார். மற்ற ஜாதியினர் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர்.
எனவே, திராவிடத்தையும், உட்கட்சி ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில், 'மறுமலர்ச்சி திராவிட ஜனநாயக கழகம்' என்ற புதிய கட்சி உருவாக்கப்பட உள்ளது.
எந்த அணியில் இணைந்து செயல்படுவது என்பதை, லோக்சபா தேர்தலுக்கு முன், நிர்வாகக் குழு கூடி முடிவு செய்யும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
