புலம்பெயரும் வங்கதேச ஹிந்துக்கள்: இந்தியாவுக்கு நெருக்கடி
புலம்பெயரும் வங்கதேச ஹிந்துக்கள்: இந்தியாவுக்கு நெருக்கடி
ADDED : ஆக 07, 2024 05:23 AM

வங்க தேசத்தில் ஏற்பட்டுள்ள கலவர சூழலால் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. தற்காலிகமாக, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. வேலை வாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை, மதவாத அடிப்படைவாதிகளின் மேலெழுந்த போக்கு, ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கு எதிரான மக்கள் மனநிலை, இளைஞர்களும், மாணவர்களும் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்தது என, வங்க தேசத்தின் நெருக்கடியான நிலைக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனாலும், ராணுவம் கைவிரித்த நிலையில், சொந்த நாட்டில் இருந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவே வெளியேறிவிட்ட நிலையிலும், அங்கு கலவரம் கட்டுக்குள் வருவதாக இல்லை. இத்தனை ஆண்டு காலமாக, அங்கு நிலவி வந்த மத மோதல்களும், தற்போது தலை துாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
காலம் காலமாக முஸ்லிம்களோடு சகஜமாக வாழ்ந்து வந்த ஹிந்துக்கள், தற்போது நெருக்கடிக்கு உள்ளாகி, இந்தியாவை நோக்கி இடம் பெறத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலை தொடர்ந்தால், இந்தியா கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும் என்று, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
நெருக்கடி அதிகரிக்கும்
இதுகுறித்து, இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: படிப்பு, தொழில் உள்ளிட்டவைகளுக்காக, இந்தியாவில் இருந்து, லட்சக்கணக்கான ஹிந்துக்கள், வங்கதேசம் சென்றுள்ளனர். வங்க தேசத்தில் பதற்றமான சூழல் உருவான போதே, அங்கிருந்து வெளியேறத் துவங்கி விட்டனர். அவர்கள் பல்வேறு மார்க்கங்களில், இந்திய எல்லைக்கு வந்து, நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல துவங்கி விட்டனர். அவர்கள் இன்றைக்கு அல்ல; என்றைக்காவது இந்தியாவுக்கு திரும்பக் கூடியவர்கள் தான்.
ஒரு நாட்டிற்கு பிழைப்புக்காகவோ, படிப்புக்காகவோ செல்கிறவர்கள், அந்த நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டதும், சொந்த நாட்டுக்குத் திரும்புவது வாடிக்கைதான். அப்படித்தான், சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் துவங்கியதும், உக்ரைன் நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள் பலரும் நாடு திரும்பினர். அதேபோல்தான், சாரை சாரையாக இந்தியாவுக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், நீண்ட காலமாக அங்கிருக்கும் குடியுரிமை பெற்ற ஹிந்துக்களில் ஒரு பகுதியினரும், இந்தியாவுக்கு தப்பி பிழைக்க, ஓடோடி வருவது ஆபத்தான சூழல்தான்.
1.5 லட்சம் பேர்
தற்போதைய சூழலில், அங்கிருந்து வரும் ஹிந்துக்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, 1.5 லட்சம் பேர்வரை, விரைவிலேயே இந்தியாவுக்குள் வரக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களையும் இந்தியர்களாகத்தான் பாவிக்க வேண்டும் என, இங்கிருப்போர், அரசியலுக்காக கருத்துக்களைச் சொன்னாலும், அவர்களை இங்கே அகதிகளாகத்தான் கையாள முடியும்.
அப்படி வருபவர்களை ஏற்க முடியாது என, இந்தியாவால் சொல்ல முடியாது. அப்படி வருகிறவர்களுக்கு முகாம் அமைப்பதில் துவங்கி, உணவளிப்பது, வாழ்வாதாரத்துக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதுவரை, எல்லாமே இந்தியாவின் தலையாய கடமையாகி விடும். இது, இந்திய அரசுக்கு கடும் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும். ஏற்கனவே இலங்கையில் இருந்து இந்தியா வந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவே, இன்றளவும் தடுமாறி வருகிறோம். இதில், வங்க தேசத்தை சேர்ந்த ஹிந்துக்களும் சேர்ந்தால், இந்தியாவுக்கு தலைவலிதான்.
இப்படியொரு சூழலை சந்திக்க வேண்டும் என்பதுதான், சீனாவின் வெகு நாளைய கனவாக இருந்தது. வங்க தேசத்தில் தற்போதைய சூழல் மற்றும் நெருக்கடி வாயிலாக, அது நிகழ்வதில், சீனா சந்தோஷமாக உள்ளது. வங்க தேசத்தில் நிகழ்ந்திருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு பின்னணியில், சீனாவின் கரங்கள் உண்டு என்பதால், எப்படி பார்த்தாலும், அது இந்தியாவுக்குத்தான் சிக்கல். வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் ஏராளமான ஹிந்துக்களில், தமிழகத்துக்கு மட்டும், 30க்கும் அதிகமானோர் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
![]() |
- நமது நிருபர் -