'பிளாஸ்டிக்' பாக்கெட்டுகளில் பால் வினியோகம்; மாற்று வழியை கண்டறிய ஆவினுக்கு உத்தரவு
'பிளாஸ்டிக்' பாக்கெட்டுகளில் பால் வினியோகம்; மாற்று வழியை கண்டறிய ஆவினுக்கு உத்தரவு
ADDED : பிப் 21, 2026 06:45 AM

சென்னை: நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில், பால் வினியோகிப்பதற்கு பதிலாக, மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆவின் நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்று வழி
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில், 'பெட்' பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, அதே மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணிய கவுசிக் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்து வரும், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, அவ்வவ்போது இடைக்கால உத்தரவை பிறப்பித்து வந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட, மூத்த வழக்கறிஞர் டி.மோகன், ''பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அதற்கு பதில், 'டெட்ரா' பாக்கெட்டுகளில் விற்பனை துவக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், 'பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட தடை, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும், டெட்ரா பாக்கெட்டுகளுக்கும் பொருந்தும். டெட்ரா பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்களை விட அபாயகரமானவை. 'டெட்ரா பாக்கெட்டுகளில் பொருட்களை விற்பனை செய்வதற்கு பதில், மாற்று வழிகளை கண்டறிய வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளோம்.
தள்ளிவைப்பு
எனவே, குடிநீரை டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய முடியாது. குடிநீர் டெட்ரா பாக்கெட்டுகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றை விற்கும் கடைகளுக்கு, 'சீல்' வைக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ''நீலகிரியில் ஆவின் பால் பாக்கெட்டுகள் வாயிலாக, ஒரு நாளைக்கு 60 லட்சம் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன.
''பாலை கண்ணாடி பாட்டில்களில் வினியோகிக்க இருப்பதாகவும், அதற்கான டெண்டர் நடைமுறைகள் துவங்கி உள்ளதாகவும், கடந்த 2013ல் ஆவின் நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது,'' என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ''பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, பாலை வினியோகிக்க மாற்று வழியை கண்டறிந்து, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என, ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

