அதிகரிக்கும் கனிமவள கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகன் தான் காரணம்: லாரி ஓனர்கள் குற்றச்சாட்டு
அதிகரிக்கும் கனிமவள கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகன் தான் காரணம்: லாரி ஓனர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜன 28, 2025 04:24 AM

சென்னை: ''அதிகரித்து வரும் கனிமவள கொள்ளைக்கு, அமைச்சர் துரைமுருகனும், அதிகாரிகளும் தான் காரணம்,'' என, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறினார்.
அவரது பேட்டி:
தமிழகத்தில் 4,000க்கும் மேற்பட்ட 'கிரஷர்' இயந்திரங்கள், அரசு அனுமதியின்றி இயங்கி வருகின்றன. இவற்றின் வாயிலாக அரைக்கப்படும் கனிமங்கள், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, நாள்தோறும் டன் கணக்கில் கடத்தப்பட்டு வருகின்றன.
மாநிலத்திலேயே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான், அதிக அளவு குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இங்குள்ள மலைகள் அதிக அளவில் உடைக்கப்பட்டு, கிடைக்கும் ஜல்லி கற்கள், 'எம்- - சாண்ட்' உள்ளிட்ட கனிமங்கள், நாள்தோறும் 1 லட்சம் டன் வீதம், கர்நாடகாவுக்கு லாரிகள் வாயிலாக கடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் இரவும், பகலும் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் கனிம வள கொள்ளை குறித்து கலெக்டரிடம் கூறியும், அவர் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அங்கு இயங்கும் 38 கிரஷர் இயந்திரங்கள் வாயிலாக, தரமற்ற எம் - சாண்ட் தயாரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு விற்கப்படுகிறது. எனவே, அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கனிமவள கொள்ளைக்கு, துறை அமைச்சர் துரைமுருகனும், அதிகாரிகளும் தான் காரணம். கனிம வள கொள்ளை குறித்து, 2020ல் இருந்தே, தொடர் மனு கொடுத்து வருகிறோம். இதில் அமைச்சரும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அவர்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கனிமவள பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுனர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களை, 'கொள்ளையில் ஈடுபடுவோர்' என, சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்வது கண்டனத்திற்குரியது. கனிம வள கொள்ளை குறித்து, அரசுக்கு புகார் தெரிவிக்க, 10 மாவட்டங்களில், 'லோக் ஆயுக்தா' அமைப்பை, அரசு செயல்படுத்த வேண்டும்.
மேலும், இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, கனிமவளத்துறையை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து பறிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.