'தீபாவளிக்கு உயர்ந்தது மற்ற நாட்களில் உயரல': மது விற்பனை குறித்து அமைச்சர் புது விளக்கம்
'தீபாவளிக்கு உயர்ந்தது மற்ற நாட்களில் உயரல': மது விற்பனை குறித்து அமைச்சர் புது விளக்கம்
ADDED : அக் 24, 2025 01:52 AM

ஈரோடு: ''தீபாவளி நாளில் மது விற்பனை உயர்ந்துவிட்டது. மற்ற நாட்களில் உயரவில்லை என சந்தோஷப்படுங்கள்'' என, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி, அளித்த பேட்டி:
'கடந்த, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு தீபாவளிக்கு 'டாஸ்மாக்'கில் விற்பனை அதிகமாகி இருக்கிறது. அதில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி உள்ளனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அங்கலாய்த்திருக்கிறார்.
வழக்கம் போல் தான் இந்தாண்டும் டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் விற்கப்பட்டன. இதற்காக, எந்த சிறப்பான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்தாண்டை விட கூடுதல் விற்பனை என்பது தானாக நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும், கடந்த ஆண்டை விட கூடுதலாக மது விற்பனை நடப்பது வழக்கமாகி விட்டது.
கடந்தாண்டுகளில், டாஸ்மாக் விற்பனையை உற்று நோக்கினால், எல்லாருக்கும் அது புரியும். விற்பனை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கோடு, தமிழக அரசு எந்த தனி முயற்சியும் எடுக்கவில்லை.
உடனே, 'தீபாவளி யன்று , 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதே. சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என பலரும் கவலை தெரிவிக்கத் துவங்கி விட்டனர்.
எதையும் குற்றச்சாட்டாக பார்க்க முடியாது. குடிக்கும் பழக்கம் சமூகத்தில் அதிகமாகி இருக்கிறது. அதை மாற்ற என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அரசுத் தரப்பில் யோசித்து வருகிறோம். குடி பழக்கத்தில் இருப்போரிடமும் கலந்து பேசி, அவர்களுடைய தரப்பையும் கேட்டு அறிந்து தான், எதையாவது செய்ய வேண்டும்.
இதில் சட்டத்தை வைத்துக் கொண்டு வேறு எதுவும் செய்து விட முடியாது. இது தான் யதார்த்த சூழல். இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட தீபாவளி நாளில் மது விற்பனை உயர்ந்திருந்தாலும், மற்ற நாட்களில் உயராமல் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும். தீபாவளிக்கான விற்பனை கூடுதல் என்றவுடன், அது ஏதோ தீபாவளி நாளில் மட்டும் உயர்ந்த எண்ணிக்கை அல்ல. தீபாவளிக்கு முதல் நாள் விற்பனையையும் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும்.
பண்டிகை சூழல் வந்ததும், அதிகம் பேர் கூடுதல் எண்ணிக்கையில் மது வாங்கி, குடிக்கின்றனர். பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் விஷயத்தையும் அரசுத் தரப்பில் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறோம். அது பற்றி விரிவாக பிறகு பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

