மண் கடத்தலை தடுத்த அதிகாரி துாக்கியடிப்பு; நேர்மையை 'பந்தாடிய' அமைச்சர் பி.ஏ.,க்கள்
மண் கடத்தலை தடுத்த அதிகாரி துாக்கியடிப்பு; நேர்மையை 'பந்தாடிய' அமைச்சர் பி.ஏ.,க்கள்
UPDATED : மார் 13, 2024 03:43 AM
ADDED : மார் 13, 2024 01:13 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு ஆர்.ஐ., சிவசக்தி. பிப்., 28ல் இடையன்கிணறு கிராமத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
மண் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்து, பறிமுதல் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த ஆளுங்கட்சி நிர்வாகி, வாகனத்தை விடுவிக்குமாறு அதிகாரியை மிரட்டியுள்ளார்; அதிகாரி மறுத்தார்.
அடுத்து அமைச்சர் ஒருவரின் உதவியாளர்கள், ஆர்.ஐ.,யின் மொபைல் போனுக்கு பேசி வாகனத்தை விடுவிக்க கூறினர். அதற்கும் அவர் உடன்படவில்லை.
இந்நிலையில், சிவசக்தி கடந்த 5ம் தேதி பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். மண் கடத்தல் லாரியை மடக்கி பிடித்த நேர்மையான அதிகாரி பழிவாங்கப்பட்டதும், அதற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மவுனமாக இருந்ததும் நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஐ., சிவசக்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
பிப்., 28ம் தேதி ரோந்து மேற்கொண்டேன். தாராபுரம் - இடையன்கிணறு கிராமம் அருகே நம்பர் பிளேட் இல்லாத லாரி வந்தது. சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இல்லாததும், அனுமதியின்றி மண் கடத்தப்பட்டதும் தெரிந்தது.
நடவடிக்கை எடுக்க ஸ்டேஷனுக்கு லாரியை எடுத்து வருமாறு கூறினேன். டிரைவர் வர மறுத்து, சில பொய்யான காரணங்களை கூறியபடி, காலதாமதம் செய்தார்.
சற்று நேரத்தில், லாரியை விடுவிடுக்க கேட்டு, ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் காரில் வந்தனர். மினிஸ்டர் பி.ஏ., பேசுவதாக கூறி, போனை கொடுக்க, நான் வாங்க மறுத்தேன். தொடர்ந்து, என் மொபைல் போனுக்கு அழைக்க ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்துக்கு மேல், போனை வாங்கி பேசிய போது, லாரியை விடுவிக்க கூறினர். அவர்களின் அழுத்தம், என் பாதுகாப்பை நினைத்து, எச்சரிக்கை செய்து லாரியை விடுவித்துவிட்டு கிளம்பினேன். அடுத்த சில நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டேன். என்ன காரணம் என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

