அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக அமைச்சர்கள் போட்டி போட்டு ஆதரவு
அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக அமைச்சர்கள் போட்டி போட்டு ஆதரவு
ADDED : செப் 22, 2024 03:19 AM

அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என, அமைச்சர்கள் போட்டி போட்டு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
'அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என, சமீபத்தில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் பேசினார். ஏற்கனவே, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு விழாவில், உதயநிதி துணை முதல்வராகும் தேதியை சொல்லி விட்டு, பின் மாற்றிக் கொண்டார்.
அமைச்சர்கள் துரைமுருகன், மகேஷ், அன்பரசன், மஸ்தான் உள்ளிட்டோரும் போட்டி போட்டு, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குமாறு ஆதரவு கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது உறுதியாகி விட்டது. அதனால் தான், அனைத்து அமைச்சர்களும் போட்டி போட்டு ஆதரவு அளித்து வருகின்றனர். கட்சி கூட்டங்கள் நடத்தும்போது, அதில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தி பேசுமாறு, ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு மாவட்டச்செயலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தின் கீழ் தளத்தில், துணை முதல்வருக்கான அறை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அமைச்சர்களின் வரிசையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்ததாக, மூன்றாவது இடம் துணை முதல்வருக்கு ஒதுக்கப்படுகிறது.
வரும் 24ம் தேதி டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அவர் சென்னை திரும்பியதும், எந்த நேரத்திலும் உதயநிதியை துணை முதல்வராக்கும் அறிவிப்பு வெளிவரலாம். அதே நேரத்தில், இது புரட்டாசி மாதம் என்பதால், அறிவிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன
- நமது நிருபர் -.