அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள்; அழைத்து பேசி சரிகட்ட அமைச்சர்கள் முயற்சி
அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள்; அழைத்து பேசி சரிகட்ட அமைச்சர்கள் முயற்சி
UPDATED : டிச 24, 2025 06:14 AM
ADDED : டிச 24, 2025 06:05 AM

சென்னை: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என, 2021 சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று, வரும் 2026 மே மாதத்துடன், ஐந்து ஆண்டுகள் முடிகின்றன.
இதையடுத்து, புதிய அரசை தேர்வு செய்வதற்கான சட்டசபை தேர்தல், 2026 ஏப்ரலில் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஒரு மாதத்திற்கு முன் நடைமுறைக்கு வரும் என்பதால், அதற்குள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என, அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிதிச் சுமையை காரணம் காட்டி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு தயங்குகிறது. இதேபோல ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. இதனால், அதிருப்தி அடைந்துள்ள அரசு ஊழியர்கள், போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஜனவரி 6ம் தேதி முதல், வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தை அரசு உணர்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சமாதானம் செய்யும் வகையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர், டிச., 22ம் தேதி பேச்சு நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டிச., 29ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, பல்வேறு சங்கங்கள் அறிவித் துள்ளன.
இதனால், அரசுக்கு நெருக்கடி அதிகரிக்கும். எனவே, முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டங்களை தள்ளிவைக்குமாறு, சங்கங்களிடம் வலியுறுத்த, அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசு என்ற பெயரில், மாவட்ட வாரியாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேச, அமைச்சர்கள் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

