பல கோடி ரூபாய் பட்டு புடவைகள் 'கோ - ஆப்டெக்ஸ்'சில் தேக்கம்; வெளிமாநில ஆடைகள் விற்பனை முடக்கம்
பல கோடி ரூபாய் பட்டு புடவைகள் 'கோ - ஆப்டெக்ஸ்'சில் தேக்கம்; வெளிமாநில ஆடைகள் விற்பனை முடக்கம்
UPDATED : டிச 24, 2025 06:35 AM
ADDED : டிச 24, 2025 06:05 AM

சென்னை: அசாம், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பட்டு ஆடை ரகங்கள் குறித்து தமிழக கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை. இதனால் பட்டு குறித்த வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறுவதால், அண்ணா சாலையில் உள்ள கோலம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு புடவைகள் விற்பனையின்றி தேக்கமடைந்து உள்ளன.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கமான, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கீழ், சென்னையில் எழும்பூர், தி.நகர், அண்ணா சாலை உட்பட எட்டுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் செயல் படுகின்றன.
இவற்றில், அண்ணா சாலையில் உள்ள கோலம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், பிற மாநிலங்களின் ஆடை ரகங்கள் மட்டும் அடங்கிய, 'ஹேண்ட்லுாம்ஸ் ஆப் இந்தியா' என்ற தனி விற்பனை பிரிவு செயல்படுகிறது.
பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும், பாரம்பரிய கைத்தறி ஆடை ரகங்களை தமிழக மக்கள் எளிதில் வாங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில் இப்பிரிவு துவங்கப்பட்டது. அதன்படி, அசாம், ம.பி., ஒடிஷா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகள், இப்பிரிவில், விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், வெளி மாநில ஆடை ரகங்கள் குறித்து, தமிழக கோ - ஆப்டெக்ஸ் விற்பனையாளர்களுக்கு, உரிய பயிற்சி வழங்கப் படவில்லை.
அதாவது, ஒவ்வொரு ஆடையின் தனித்துவம், அதை பயன்படுத்தும் விதம் உள்ளிட்ட தகவல்கள், அவர்களுக்கு தெரிவதில்லை. அதனால், வாடிக்கையாளர்கள் வெளி மாநில ஆடை ரகங்களை வாங்க ஆர்வம் காட்டாமல் திரும்பி சென்று விடுகின்றனர். இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான வெளி மாநில பட்டு, காட்டன் உள்ளிட்ட ஆடை ரகங்கள் 10 மாதங்களாக விற்பனையாகாமல், கோலம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தேக்கமடைந்து உள்ளன.
வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது: நாடு முழுதும் உற்பத்தி செய்யப்படும், பிரத்யேக ஆடை ரகங்கள், அண்ணா சாலையில் உள்ள கோலம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் கிடைக்கும் என, கோ - ஆப்டெக்ஸ் இணைய பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதை பார்த்து, கடந்த மாதம் விற்பனை நிலையத்தை பார்வையிட்டோம். ஆனால், அப்பிரிவில் இருந்த ஊழியருக்கு, ஆடை ரகங்கள் குறித்த எந்த அடிப்படை தகவலும் தெரியவில்லை.
பனாரஸ் பட்டு பிரிவில், 80,000 ரூபாய் மதிப்புள்ள புடவை இருந்தது. அதன் வகை என்ன, தன்மை எப்படி இருக்கும் உள்ளிட்ட தகவல் குறித்து விற்பனையாளரிடம் கேட்ட போது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும், 'அதிகாரிகள் தங்களுக்கு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை' என்றனர்.
இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி, பட்டு உள்ளிட்ட ஆடைகள் ரகங்கள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன. தற்போது அவற்றை 30 சதவீத தள்ளுபடியில் விற்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

