ரயில் சேவையில் இணைகிறது மிசோரம்: நிஜமானது 26 ஆண்டு கால கனவு
ரயில் சேவையில் இணைகிறது மிசோரம்: நிஜமானது 26 ஆண்டு கால கனவு
UPDATED : ஜூலை 17, 2025 03:23 PM
ADDED : ஜூலை 13, 2025 11:55 PM

அய்ஸ்வால்: மிசோரமின் பைராபி - சாய்ராங் ரயில் பாதை திட்டம், 26 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் லால்துஹோமா தலைமையில் சோரம் மக்கள் இயக்கம் ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் அய்ஸ்வால் மாவட்டத்தில் உள்ள பைராபி - கோலாசிப் மாவட்டத்தின் சாய்ராங் இடையே, 51.38 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்க, 1999 செப்டம்பரில் முடிவு செய்யப்பட்டது.
அடர்ந்த காடுகள், வெளிச்சம் இல்லாதது, உள்ளூர் பிரச்னைகளால் இத்திட்டத்தை செயல்படுத்துவது சிரமம் என, கண்டறியப்பட்டது. 2003ல் இத்திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியது.
மிசோரம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான இணைப்பை கருதி, அப்போதைய காங்., அரசு இந்த திட்டத்தை, 2008--09ல், 'தேசிய திட்டம்' என அறிவித்தது. தொடர்ந்து, 2014, நவ., 29ல் பிரதமர் மோடி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, 2014- - 15ல், நிலம் கையகப்படுத்தும் பணியை வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே நிறைவு செய்தது. ஓராண்டு கழித்து, கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் துவங்கின.
இந்நிலையில், பைராபி - சாய்ராங் ரயில் பாதை திட்டம் நிறைவடைந்துள்ளது. இதன் வாயிலாக, 26 ஆண்டு கால கனவு, நனவாகி உள்ளது. இத்திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் துவக்கி வைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் தலைமை இன்ஜினியர் வினோத் குமார் கூறுகையில், ''இப்பகுதியில் வேலை செய்வது மிகவும் கடினமானது. நவ., - மார்ச் வரை மட்டுமே வேலை செய்ய முடியும். மற்ற மாதங்களில் மழை பெய்யும் என்பதால், கட்டுமான பணி சவாலானதாக இருந்தது,'' என்றார்.மொத்தம் 51.38 கி.மீ., ரயில் பாதையில், ஐந்து ரயில் நிலையங்கள், 12.85 கி.மீ., நீளத்தை உள்ளடக்கிய 48 சுரங்கப்பாதைகள், 55 பெரிய மற்றும் 87 சிறிய பாலங்கள், ஐந்து சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.