மின்சாரமே பார்க்காத மலைவாழ் குடியிருப்பு! மத்திய அரசின் திட்டத்தால் இப்போது புதுப்பொலிவு
மின்சாரமே பார்க்காத மலைவாழ் குடியிருப்பு! மத்திய அரசின் திட்டத்தால் இப்போது புதுப்பொலிவு
UPDATED : செப் 25, 2024 04:34 AM
ADDED : செப் 25, 2024 12:00 AM

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தை (எஸ்.டி.சி.,) செயல்படுத்தி வருகிறது. திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, பழங்குடியினர் வாழ்வில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் வந்துள்ளதை, நேரில் காண முடிந்தது.
பொள்ளாச்சி, ஆனைமலை அடுத்த சர்க்கார்பதி அருகே நாகரூத்து பழங்குடியினர் குடியிருப்பு, அடிப்படை வசதிகள் ஏதுமற்ற, வனத்துக்குள் அமைந்திருக்கிறது. அங்கிருந்து மலையடிவார கிராமங்களுக்கு வரவே, கரடுமுரடான பாதைகளை சுமார் இரண்டு மணி நேரம் வரை, கடந்து வர வேண்டும்.
இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு சார்பில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நாகரூத்து (2) பழங்குடியினர் குடியிருப்பில், கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன முதன்மை விஞ்ஞானி புத்திரபிரதாப், முதன்மை விஞ்ஞானி மோகன்ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தினர்.
இது தொடர்பாக, புத்திர பிரதாப் கூறியதாவது:
சத்தியமங்கலம் பகுதியில் 7 , சேலத்தில் 5, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 6 என, 18 பழங்குடியினர் குடியிருப்புகளில் எஸ்.டி.சி., திட்டத்தை 2021 முதல் செயல்படுத்தி வருகிறோம். இவை, எளிதில் அணுக முடியாத தொலைதூர குடியிருப்புகள்.
முதல்கட்ட ஆய்வில், இம்மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, தகவல் தொடர்பின்மை, சிறுவயது திருமணம், பணிப்பளு, பொருளாதார தற்சார்பின்மை, அடிப்படை மருத்துவ வசதியின்மை என பல்வேறு குறைபாடுகளைக் கண்டறிந்தோம்.
ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க, காய்கறி விதை வழங்கினோம். சிறு வயது திருமணங்களால் ஏற்படும் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
![]() |
பிரமாதமான முன்னேற்றம்
நான்காண்டுகளுக்குப் பிறகு, மலை மலசர் இனத்தைச் சேர்ந்த 38 குடும்பங்கள் வசிக்கும், நாகரூத்து 2 பழங்குடியினர் குடியிருப்பில், திட்டத்தின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்தோம். சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உணவுப்பழக்க வழக்கம் மாறி, காய்கறி அதிகம் சேர்க்கின்றனர். சிறு வயது திருமணத்தை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
தார்பாலின், சுவர் கடிகாரங்கள், காய்கறி விதைகள், முதலுதவிப் பெட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட், பண்ணைக் கருவிகளை மீண்டும் வழங்கியுள்ளோம். தொடர்ந்து மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குனர் கோவிந்தராஜ் வழிகாட்டுதலோடு, புதிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டம், பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார, அறிவுசார் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பது, வரவேற்கத்தக்க அம்சம்.
![]() |
- நமது நிருபர் -