ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தை 'அரசியலாக்கிய' எம்.பி.,க்கள்!
ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தை 'அரசியலாக்கிய' எம்.பி.,க்கள்!
ADDED : ஏப் 25, 2025 05:23 AM

மதுரை : மதுரையில் நேற்று நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனை கூட்டத்தை எம்.பி.,க்கள் சிலர் 'அரசியலாக்கினர்'. பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, ரயில்வே ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்தது ஏன் என கொதிப்படைந்தனர்.
தெற்கு ரயில்வே சார்பில் நடந்த இக்கூட்டத்தின் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட வைகோ கூட்டத்தை வழிநடத்தினார். எம்.பி.,க்கள் மதுரை வெங்கடேசன், திண்டுக்கல் சச்சிதானந்தம், தேனி தங்கத்தமிழ்ச்செல்வன், விருதுநகர் மாணிக்கம்தாகூர், நெல்லை ராபர்ட் புரூஸ், தென்காசி ராணி, திருச்சி துரை, கேரளா மாவேலிக்கரை சுரேஷ் கொடிக்குன்னில், புதுக்கோட்டை அப்துல்லா, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மர் பங்கேற்றனர்.
ரயில்வே சார்பில் பொதுமேலாளர் ஆர்.என்.சிங், துணை பொதுமேலாளர் அஜய் கவுசிக், கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பங்கேற்றனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து எம்.பி.,க்கள் கூறியதாவது:
திண்டுக்கல் - சபரிமலை ரயில்
வைகோ கூறியதாவது: திண்டுக்கல் - சபரிமலை ரயில் விட வேண்டும். மதுரையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும். புதுப்புது வழித்தடங்களை உருவாக்க வேண்டும். என் சொந்த ஊரில் இருந்து 6 கி.மீ.,ல் உள்ள பிரிட்டிஷ் காலத்து கரிவலம்வந்தநல்லுார் ஸ்டேஷனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினேன். நிறுத்தப்பட்ட நிறுத்தங்களை மீண்டும் கேட்டுள்ளோம்.
ரயில்வே பட்ஜெட் முன்பு தனியாக தாக்கல் செய்யப்பட்டபோது, அதுகுறித்த விபரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போன்றவை குறித்து புத்தகம் வெளியிடப்பட்டு வந்தது. அதை நிறுத்தியது அநியாயம்.
வாரம் 4 நாள் போடி - சென்னை ரயில்
வெங்கடேசன் கூறியதாவது: ரயில்வே துறையில் ஹிந்தி சொல்லை அப்படியே தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். இப்படி உத்தரவிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். பாம்பன் புதிய ரயில் பாலம் 33 சதவீதத்திற்கும் குறைவாக பாதுகாப்பு குறை இருப்பதாகவும், வந்தே பாரத் ரயில் இன்ஜின் பகுதி எடை குறைவாக இருப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளதை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம்.
வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் போடி - சென்னை ரயில் 4 நாட்கள் இயக்கப்படும் என தெரிவித்தனர். திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ், தாம்பரம் - ஐதராபாத் ரயில்களை மதுரையில் இருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. லோகோ பைலட்டிற்காக 619 இன்ஜின்களில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 150 இன்ஜின்களில் அமைக்கும் பணி நடப்பதாகவும் தெரிவித்தனர்.
மதுரையில் இருந்து 'மெமு' ரயில்
மாணிக்கம்தாகூர் கூறியதாவது: மதுரையில் இருந்து திண்டுக்கல், தேனி, விருதுநகர், மானாமதுரைக்கு 'மெமு' ரயில் விட வேண்டும் என வலியுறுத்தினோம். மதுரை - அருப்புக்கோட்டை - துாத்துக்குடி வழித்தடம் குறித்து ரயில்வே வாரியம் தெளிவுப்படுத்த வேண்டும். ரயில்வே பணி மக்கள் தொடர்பானது என்பதால் தமிழ் மொழி தெரிந்தவர்களை இங்கு பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதேபோல் மற்ற எம்.பி.,க்களும் தங்கள் தொகுதிக்கான தேவைகள் குறித்து பேசினர். மனுவாகவும் கொடுத்தனர்.
உங்களுக்கு தமிழ் தெரியுமா
கூட்டத்தில் பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன், முன் வரிசையில் இருந்த பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உள்ளிட்டோரை பார்த்து 'உங்களுக்கு தமிழ் தெரியுமா. தமிழ் பேசுபவர்கள் எல்லாம் பின்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள்' என்று கூறியவர், 'தமிழ் தெரிந்தவர்கள் இக்கூட்டத்திற்கு வந்தால் என்ன' என ஆதங்கப்பட்டார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய வெங்கடேசன், 'பா.ஜ., அரசு மீண்டும் பொறுப்பேற்று ஓராண்டு ஆகவுள்ள நிலையில் இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்த 4 மாதங்களில் நடத்தி இருக்க வேண்டும். எம்.பி.,க்கள் சொல்வதை கேட்டு வேலை செய்ய ரயில்வே துறை சுணக்கம் காட்டுவதாக தெரிகிறது' என குற்றம்சாட்டினார். இதுகுறித்து வைகோவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, 'காலதாமதமாக கூட்டம் நடத்தப்படவில்லை. எப்போதும் போல்தான் நடந்தது' என்றார்.