'வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் நாரிமன்!'
'வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் நாரிமன்!'
UPDATED : பிப் 22, 2024 03:05 AM
ADDED : பிப் 22, 2024 02:34 AM

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், புகழ்பெற்ற சட்ட நிபுணருமான பாலி நாரிமன், 95 வயது வயதில் காலமானார். மியான்மர் நாட்டில், ரங்கூனில் பிறந்தவர். சிம்லாவில் பள்ளி படிப்பு, மும்பையில் சட்டப் படிப்பை முடித்தார்.
மும்பை உயர் நீதிமன்றத்தில், 22 ஆண்டுகள் 'பிராக்டிஸ்' செய்தார். பின், உச்ச நீதிமன்றத்தில் தனது பிராக்டீசை 1971ல் துவங்கினார். 1972 முதல் 75 வரை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தார். அவசரநிலை பிரகடனத்தின்போது, பதவியை ராஜினாமா செய்தார்.
மறைந்த சட்ட நிபுணர் பாலி நாரிமன் குறித்து, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் கூறியதாவது:
நீதித் துறையின் சுதந்திரத்துக்காகவும், வழக்கறிஞர் சமூகத்துக்காகவும் பாடுபட்டவர், மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன். நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ள, மத்திய அரசு தேசிய ஜுடிஷியல் கமிஷன் ஏற்படுத்தியபோது, அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். வழக்கில் வெற்றியும் பெற்றார். ஜுடிஷியல் கமிஷனை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
போபால் விஷ வாயு கசிவு வழக்கில், யூனியன் கார்பைடு நிறுவனத்துக்காக, பாலி நாரிமன் வாதாடினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய இழப்பீடு கிடைக்க செய்ததில், இவரது பங்கு முக்கியமானது.
அதேபோல், குஜராத்தில் நர்மதா அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தும்போது, அந்தப் பகுதியில் குடியிருந்தவர்கள் காலி செய்யப்பட்டனர். குஜராத் அரசு சார்பில், இவர் ஆஜரானார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவினார்.
மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனின் வாத திறமையை, நான் நேரில் பார்த்துள்ளேன். வழக்கறிஞராக இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்துக்கு வழக்குக்காக செல்லும்போது, அவரது வாதங்களை கவனித்துள்ளேன்.
ஒரு வழக்கறிஞராக, நீதிமன்றத்தில் எப்படி வாதத்தை முன்வைக்க வேண்டும் என்பதை கற்று கொண்டேன். அவரது வாத திறமையை, நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பாராட்டி உள்ளனர். வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு, முன்மாதிரியாக அவர் திகழ்ந்தார்.
சட்டத் துறையில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளை, மத்திய அரசு வழங்கி உள்ளது.
ராஜ்யசபாவில், நியமன எம்.பி.,யாகவும், 1999 -2005ம் ஆண்டில் பதவி வகித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் நாரிமனின் மறைவு, நீதித் துறைக்கு பேரிழப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -