இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டம்: கிருஷ்ணகிரியில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டம்: கிருஷ்ணகிரியில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
UPDATED : ஜன 09, 2024 07:55 AM
ADDED : ஜன 09, 2024 07:24 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - கோவை இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டத்தை, மத்திய அரசு துவக்கி வைத்துள்ளது. இத்திட்டத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பல பேருக்கு, வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
நாட்டின் எரிசக்தி தேவையில், இயற்கை எரிவாயு பங்கீட்டை உயர்த்தி, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.
கடந்த, 2ல் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தும் வைத்தார்.
அதன்படி, கெயில் எனப்படும் இந்திய எரிவாயு ஆணையத்தால், கே.கே.பி.எம்.பி.எல்., திட்டத்தில், கோவை முதல் கிருஷ்ணகிரி வரை, 294 கி.மீ., நீள இயற்கை எரிவாயு பைப்லைன் அமைக்கப்படுகிறது.
தேசிய எரிவாயு கட்ட விரிவாகத்தின் படி கொச்சி, கூட்டநாடு, பெங்களூரு, மங்களூரு குழாய் வழி திட்டத்தின் ஒரு பகுதி. இதற்காக, 2,187 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் இந்த பைப்லைன் திட்டத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் பயன்பெற உள்ளன.
இந்த மாவட்டங்கள் வழியாக செல்லும், இயற்கை எரிவாயு பைப்லைன், தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணையும். இதன் மூலம், இப்பகுதிகளிலுள்ள நகரங்கள், அதனுடன் இணைந்த கிளை பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கு, சி.என்.ஜி., மற்றும் வீடுகளுக்கான பி.என்.ஜி., இயற்கை எரிவாயுக்களும் கிடைக்கும்.
இதன் கட்டுமான பணிக்காக, 6.50 லட்சம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் தொழிற்சாலைகளிலும், பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கிருஷ்ணகிரி - கோவை பைப்லைன் திட்டத்தால், தமிழகத்தில், 9 மாவட்டங்களுக்கு இயற்கை வாயு எந்நேரமும் கிடைக்கும் வசதி பெறும்.
மேலும், 2.70 லட்சம் டன் கரியமில வாயுவின் உமிழ்வும் குறையும். இதன் மூலம், 59.20 லட்சம் நுகர்வோர்களுக்கு பி.என்.ஜி., 1,198 நிலையங்களுக்கு சி.என்.ஜி., இயற்கை எரிவாயுக்களும் வழங்கப்பட உள்ளன. இப்பணிகள், வரும் நவ., மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.