வீடுகளுக்கு சொத்து வரி மதிப்பீட்டில் அலட்சியம்; உள்ளாட்சிகள் மீது மக்கள் அதிருப்தி
வீடுகளுக்கு சொத்து வரி மதிப்பீட்டில் அலட்சியம்; உள்ளாட்சிகள் மீது மக்கள் அதிருப்தி
ADDED : டிச 24, 2024 01:43 AM

சென்னை: நகர்ப்புற பகுதிகளில் விடுபட்ட வீடுகளுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்வதில், உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
புதிதாக கட்டப்படும் ஒவ்வொரு கட்டடத்தையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து மதிப்பீடு செய்வர்.
20 சதவீதம்
சில இடங்களில் உரிமையாளர் உரிய ஆவண ஆதாரத்துடன், வீட்டின் பரப்பளவு விபரங்களை தெரிவித்தால், அதன் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
இதில், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும், 20 சதவீத கட்டடங்கள் சொத்து வரி மதிப்பிடப்படாமல் உள்ளன.
புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் உள்ளாட்சி அமைப்புகள், அதற்கு சொத்து வரி மதிப்பீடு செய்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை.
ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்ட வீடுகளில் இருந்து, நிலுவை இன்றி சொத்து வரியை வசூலிப்பதில் மட்டுமே, அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்கள், சில ஆண்டுகள் கழித்து, உள்ளாட்சி அமைப்பு அலுவலகத்தை அணுகினால், அலுவலர்கள் தெரிவிக்கும் கட்டண விகிதங்கள், நடைமுறையில் உள்ளதற்கு சம்பந்தம் இல்லாத வகையில் உள்ளன.
உதாரணமாக, மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக, 1 சதுர அடிக்கு, 2.50 ரூபாய் தான் கட்டணமாக உள்ளது. ஆனால், புதிதாக வருவோரிடம், சதுர அடிக்கு, 15 ரூபாய் வீதம் நிலுவை தொகையை செலுத்த அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகளை கேட்டால், அதை அலுவலர்கள் கொடுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது:
சமீப காலமாக, சொத்து வரி நிலுவை உள்ளிட்டவற்றை செலுத்த, மக்கள் அதிகமாக முன்வருகின்றனர். இதற்கு விடுபட்ட ஆண்டுகளுக்கான நிலுவை தொகை என்ன என்பதை, அதிகாரிகள் தெளிவாக தெரிவிப்பது இல்லை.
அனுமதி ஆவணங்கள்
குறிப்பாக, சொத்து வரி உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானம், அரசாணை போன்றவை, மக்களின் பார்வைக்கு வர வேண்டும். இந்த ஆவணங்களை, உள்ளாட்சி அமைப்புகள் இணையதளங்களில் வெளியிட முன்வர வேண்டும்.
ஒவ்வொரு புதிய கட்டடத்துக்குமான அனுமதி ஆவணங்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளன. இதன் அடிப்படையில், அந்தந்த வீடுகள் பெயரில் சொத்து வரி கணக்கை, 'ஆன்லைனில்' அதிகாரிகளே உருவாக்கலாம்.
வீடு வாங்கியவர், எப்போது வந்தாலும் அடையாளங்களை சரிபார்த்து, அவர் பெயரை அதில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், நிலுவை தொகையை முழுமையாக வசூலிக்க வழி ஏற்படும்.
சில இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், சில ஆண்டுகள் கட்டுமான நிறுவன கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அந்த சமயத்துக்கான சொத்து வரியை, அவர்களிடமே வசூலித்து விடலாம்.
கட்டுமான திட்ட அனுமதி பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனுடன் இணைந்த வகையில் சொத்து வரி மதிப்பீடு, வசூல் பணிகளை, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சொத்து வரி வசூல் தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளன. இதில், தேவையான நடவடிக்கைகளை, உள்ளாட்சி அமைப்புகள் தான் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.