குடும்ப சண்டை என கூறி கோஷ்டி பூசலை ஒப்புக்கொண்ட நேரு
குடும்ப சண்டை என கூறி கோஷ்டி பூசலை ஒப்புக்கொண்ட நேரு
ADDED : செப் 04, 2024 12:27 AM

திருச்சி : “கட்சி என்று வந்து விட்டால், வருத்தமும் மகிழ்ச்சியும் இருக்கத்தான் செய்யும்; குடும்பச் சண்டையை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்வோம்,” என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி மாவட்ட தி.மு.க.,வில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கோலோச்சி வந்தார். அவருக்கு போட்டியாக, அதே கட்சியில், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் பேரன், மகேஷ் களமிறக்கப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய உறவு வைத்துள்ள மகேஷ், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக உள்ளதோடு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவும் உள்ளார்.
தற்போது, திருச்சி மாவட்டத்தில் அமைச்சர்கள் நேரு, மகேஷ் என இரு கோஷ்டியினர் உள்ளனர். இதில், அமைச்சர் மகேஷின் கை, தற்போது ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சியின் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது.
அமைச்சர் நேரு, மேயர் அன்பழகன், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் என, பலரும் கட்சியினர் யாரையும் கண்டுகொள்வதில்லை என்று, கூட்டத்தில் பங்கேற்றோர் குற்றச்சாட்டு வைத்து பேசினர். இதனால், அமைச்சர்கள் நேருவும், மகேஷும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று திருச்சி வந்த அமைச்சர் நேருவிடம், இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்து நேரு கூறியதாவது: தி.மு.க.,வுக்குள் கோஷ்டி பூசலும் பலருக்கு சிலர் மீதான அதிருப்தியும் இருப்பது உண்மைதான். அண்ணன், தம்பி என்றால் சண்டையும் இருக்கத்தான் செய்யும்.
கட்சிக்குள் ஒருத்தருக்கு மற்றொருவரிடம் இருக்கும் சண்டை என்பது, குடும்பச் சண்டையைப் போலத்தான். குடும்பம் என்றால் மகிழ்ச்சியும், வருத்தமும் இருக்கத்தான் செய்யும். பெரிய அளவிலான பிரச்னைகள் என்றால், அதை நாங்களே ஒன்று கூடி பேசி சரி செய்து கொள்வோம். இந்தப் பிரச்னைகளுக்கும், தேர்தலுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை.
''தேர்தல் என்று வந்து விட்டால், ஒவ்வொரு கட்சிக்காரனும் வெற்றிக்காக களம் இறங்கி பாடுபடுவான். அந்த வகையில் தான் தி.மு.க.,வும் கூட்டணி கட்சிகளும், தேர்தலுக்கு தேர்தல் 100 சதவீத வெற்றி பெற்று வருகிறது. இந்த வெற்றி தொடரும்,” என்றார்.
அமைச்சர் நேருவின் பேட்டி, கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது.