திருப்பதியில் நேரு அன்னதானம்: அமலாக்கத்துறை புகாருக்கா... பிறந்த நாள் ஏற்பாடா?
திருப்பதியில் நேரு அன்னதானம்: அமலாக்கத்துறை புகாருக்கா... பிறந்த நாள் ஏற்பாடா?
ADDED : நவ 11, 2025 12:38 AM

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற, திருப்பதி வெங்கடாஜலபதியிடம் அமைச்சர் நேரு வேண்டிக் கொண்டு, 44 லட்சம் ரூபாய் நேர்த்திக்கடன் செலுத்தியதாக சமூக வலைதளங்களில் பரப்பரப்பான விவாதமாகி உள்ளது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாதம் அறக்கட்டளை சார்பாக மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதான சேவைக்காக, ஒரு நாள் முழு செலவான 44 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
காலை 10 லட்சம், மதியம் 17 லட்சம் மற்றும் இரவு 17 லட்சம் ரூபாய் என மூன்று வேளைக்கான செலவை தேவஸ்தானத்திடம் முன்கூட்டியே செலுத்தி விட்டால், நன்கொடையாளர் பெயரில், குறிப்பிட்ட நாள் முழுதும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.
நன்கொடை அளித்தவர் பெயர், கோவிலை சுற்றியுள்ள டிஜிட்டல் போர்டுகளில் ஒளிர்ந்து கொண்டு இருக்கும். அந்த வகையில் நேற்று முன்தினம் தி.மு.க.,வின் முதன்மை செயலரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான நேரு, 44 லட்சம் ரூபாய் செலுத்தி, திருப்பதி கோவிலில் அன்னதானம் வழங்கி உள்ளார்.
அவரது பெயரும், வழங்கிய தொகையும் கோவிலை சுற்றி டிஜிட்டல் போர்டுகளில் ஒளிபரப்பானது. நேற்று முன்தினம் நேருவின் பிறந்த நாள் என்பதால், அதற்காக அன்னதான நன்கொடை அளிக்கப்பட்டதாக, நேரு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அமலாக்கத்துறை புகாரில் சிக்கியிருக்கும் அவர், அதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வெங்கடாஜலபதியிடம் வேண்டிக் கொண்டு, அன்னதான நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார் என, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.
இது குறித்து அமைச்சர் நேருவிடம் கேட்டபோது, ''எங்கள் குடும்பம் சார்ந்த நிறுவனத்தின் சார்பில் என் பிறந்த நாளுக்காக, ஓராண்டுக்கு முன்பே அன்னதானத்துக்காக திருப்பதி கோவிலுக்கு தொகை செலுத்தி இருந்தனர்.
''அந்த வகையில் தான், அன்னதானம் அளிக்கப்பட்டது. அதை கோவில் டிஜிட்டல் போர்டில் போட்டுள்ளனர். மற்றபடி, வேறு எதற்காகவும் அன்னதானம் செய்யவில்லை,'' என்றார்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று முன்தினம் அன்னதான செலவு 44 லட்சம் ரூபாயை அமைச்சர் நேரு வழங்கியதால், கோவிலின் டிஜிட்டல் போர்டில் அவரது பெயர் ஒளிபரப்பானது.
- நமது நிருபர் -

