பா.ம.க.,வை பலப்படுத்த விலகவும் தயார்: வேதனையில் விம்மி வெடிக்கும் மணி
பா.ம.க.,வை பலப்படுத்த விலகவும் தயார்: வேதனையில் விம்மி வெடிக்கும் மணி
ADDED : நவ 11, 2025 12:42 AM

''ராமதாசுடன் தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள் இருக்கும் வரை, தந்தையுடன் சேர மாட்டேன் என அன்புமணி தெரிவித்து உள்ளார்.
''அவர்கள் யார் என பட்டியல் கொடுத்தால், நாங்கள் விலகிக் கொள்ள தயாராக இருக்கிறோம்,'' என, சேலத்தில் பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
சேலத்தில் அன்புமணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு, காயமடைந்த பா.ம.க., நிர்வாகிகளை நேற்று மருத்துவமனையில் சந்தித்து, அக்கட்சியின் கவுரவ தலைவர் மணி ஆறுதல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பா.ம.க.,வினரே பா.ம.க.,வினரை தாக்குகின்றனர். அதுவும், வீச்சரிவாள், இரும்பு ராடு, கற்கள் என கொடூரமாக தாக்கியுள்ளனர்.
முக்கிய குற்றவாளிகள் அன்றைய தினம் அருள் காரிலிருந்து இறங்கியிருந்தால், அங்கேயே அவர் காலியாகி இருப்பார். பல இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய அவமானகரமான, வேதனையான செயல்.
ராமதாஸ் ஆலோசனையின்படி ஆறுதல் கூற வந்தேன். இதை எவ்வளவு பெரிய சம்பவமாக ராமதாஸ் பார்க்கிறார் என்பதற்கு உதாரணம், டிசம்பரில் நடக்கும் மாநில பொதுக்குழுவை, அதே பகுதியில் நடத்துவதாக அறிவித்திருப்பதே.
இந்த தாக்குதல் சம்பவத்தில், முக்கிய குற்றவாளிகள் வெளியே சுற்றித் திரிகின்றனர். கட்சியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு, காயமடைந்துள்ள நடராஜ் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதாக போலீஸ் தெரிவிக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை மோசமடையும்.
ராமதாசுடன் தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள் இருக்கும் வரை, தந்தையுடன் சேர மாட்டேன் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சி அது யார் யார் என பட்டியல் கொடுத்தால், அதில் நானாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் விலகிக்கொள்ள தயாராக இருக்கிறோம். அதன் பிறகாவது, ராமதாசும் அன்புமணியும் சந்திக்கட்டும்; பா.ம.க.,வை வலுப்படுத்தட்டும்.
ராமதாசை சந்திக்க விடாமல், அன்புமணியை யாரும் தடுக்கவில்லை. மருத்துவமனையில் ராமதாஸ் இருந்தார். திருமண நாள், பிறந்த நாள் வந்தது. அப்போது அவர் ஏன் சந்திக்கவில்லை?
நான்கு மாதங்களாக ஒன்றாக சேர வேண்டும் என முயற்சித்தேன். பிரிந்து போனவர் அன்புமணி. அதன் பின், நடைபயணம், கொலை முயற்சி எல்லாம் நடக்கிறது. இது தேவையா?
வன்னியர்களுக்கு மட்டுமின்றி, ஓ.பி.சி., உள்ளிட்ட ஆறு சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் ராமதாஸ். அவரை நாகரிகக் குறைவாக பேசுகின்றனர்; தலையணை வைத்து அமுக்கி கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.
ஜி.கே.மணி, குடும்பத்தை பிரித்து விட்டதாக பதிவிடுகின்றனர். 45 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவனுக்கு இது தான் பரிசா? இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

