வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: அரசியல் கட்சி நிர்வாகிகள் கலக்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: அரசியல் கட்சி நிர்வாகிகள் கலக்கம்
ADDED : நவ 11, 2025 12:46 AM

சென்னை: 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடப்பதால், தேர்தல் நேரத்தில் தங்களின் வருமானம் பாதிக்கப்படுமே', என, அரசியல் கட்சி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம், காலம் காலமாக தொடர்கிறது. அந்த காலத்தில், ஓட்டுக்கு ஐந்து ரூபாய் வழங்கப்பட்டது. இன்று அது 2,000 ரூபாயைத் தொட்டு இருக்கிறது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அவற்றோடு கூட்டணி சேரும் கட்சிகளும், தேர்தல் நெருக்கத்தில் பணம் பட்டுவாடாவில் இறங்குகின்றன.
ஒரே நாளில் தொகுதி முழுதும் பணப்பட்டுவாடாவை முடிக்கும் அளவிற்கு, திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.
பணப்பட்டுவாடா என்பது தேர்தலில் கட்டாயமான நிலையில், அரசியல் கட்சிகளில் பதவியில் உள்ளோர், அதை தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், இறந்தோர் பெயர், முகவரி மாறி சென்றோர், வெளியூரில் வசிப்போர் போன்றோரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். அவர்களுடைய விபரங்களை, அரசியல் கட்சியினர் சேகரித்து வைத்திருப்பர்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கென்று, கட்சி தலைமையிடம் இருந்து கணிசமான பணத்தை கறந்து விடுவர்.
உண்மையான வாக்காளர்கள் தவிர்த்து, மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தாங்களே எடுத்துக் கொள்வர்.
இதன் வழியே, தேர்தல் நேரத்தில், கட்சியினர் சில லட்சங்களை சம்பாதிப்பர். தற்போது, தேர்தல் கமிஷன், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை துவக்கி உள்ளது.
இப்பணியின்போது, இறந்தோர், வெளியூரில் வசிப்போர், முகவரி மாறி சென்றோர் போன்றோரை கண்டறிந்து, அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது.
இவ்வாறு செய்தால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஓட்டளிக்க தகுதியுடையோர் பெயர் மட்டுமே இடம்பெறும்.
அவர்களுக்கு மட்டுமே தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யும் வாய்ப்பு இருப்பதுடன், கட்சித் தலைமையை ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டிருந்த பணம் கிடைக்காது என்பதால், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், கவலை அடைந்துள்ளனர்.
எனவே, ஓட்டுச்சாவடி அலுவலர்களை வசப்படுத்தி, முடிந்தவரை வாக்காளர் பட்டியலில் இருந்து எவருடைய பெயரையும் நீக்காமல் இருக்க, முயற்சித்து வருகின்றனர்.

