தமிழக பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள்?
தமிழக பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள்?
ADDED : பிப் 19, 2025 04:26 AM

சென்னை: தமிழக அரசின் 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை, மார்ச் 14ம் தேதி கூடுகிறது. அன்று, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதுகுறித்து, சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:
மார்ச் 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அன்று, 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். பின் மார்ச் 21ம் தேதி 2025 - 26ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகள், 2024 - 25ம் ஆண்டு கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.
சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை, அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். மார்ச் 14 அன்று அலுவல் ஆய்வு கூட்டம் கூடும். சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது, பகலில் மட்டுமா, மாலையிலும் நடத்துவதா என்பது கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மாலையில் நடத்த வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
விடுபட்ட மகளிர் அனைவருக்கும், மகளிர் உரிமைத்தொகை வழங்குவது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு, இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள், பட்ஜெட்டில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்கள் நடக்க வாய்ப்புள்ளது.