ADDED : ஏப் 26, 2025 10:59 PM

சமீப காலமாக பங்கு சந்தையில் கூடுதல் லாபம், பார்ட் டைம், கே.ஒய்.சி., புதுப்பிப்பு என கூறி மக்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. மக்களின் அறியாமை, பேராசையை பயன்படுத்தி விதவிதமாக தங்கள் வலையில் மோசடிக்கும்பல், இவர்களை வீழ்த்துகிறது; பணத்தை பறிக்கின்றன. 'சைபர்' மோசடியில் இருந்து தப்பிக்க போலீசார் அன்றாடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை கூட தெரியாமல் சிக்கி கொள்கின்றனர். திருப்பூரில் இவ்வகை மோசடிகளில் ஏமாறுவோர் அதிகரித்து வருகின்றனர்.
ஓட்டல், உணவு, மேப் ரிவ்யூ போன்றவற்றுக்கு 'ரேட்டிங்' கொடுத்து, பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம். அதிக 'டாஸ்க்'குகளை முடிப்பவர்களுக்கு கூடுதல் கமிஷன் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்ற வகையில் மக்களை நம்ப வைக்கின்றனர்.
சாமானியர் முதல் மெத்த படித்தவர் வரை
மோசடி கும்பல்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல்வேறு யுத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மோசடி கும்பல்களிடம் சாதாரண மக்களை காட்டிலும், மெத்த படித்தவர்கள், உயர் பணிகளில் உள்ளவர்கள், சுய தொழில் செய்பவர்கள் என பலர், பேராசையால் ஆண்டுக்கணக்கில் தாங்கள் சேமித்த பணத்தை இழக்கின்றனர்.
சமீப காலமாக, போலீஸ் அபராதம் விதித்தது போன்று குறுந்தகவல் அனுப்பியும், தபால் வந்தது போன்றும், கே.ஒய்.சி., அப்டேட், கடன் செயலி மூலம் லோன் என்றும் புதுப்புது டெக்னிக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தியும்...
மக்களை நேரடியாக அணுகி, பொருளாதார கஷ்டங்களைத் தெரிந்துகொண்டு, கடன் பெற தாங்கள் தேர்வாகி உள்ளீர்கள், மொபைல் போன், 'லேப்-டாப்' போன்றவற்றை எளிதாக வாங்கி தருகிறோம் என அறியாமையை பயன்படுத்தி அவர்களது மொபைல் போனை பயன்படுத்தி, அவர்களது வங்கிக்கணக்கில் இருந்தே பணத்தை சுருட்டிவிடுகின்றனர். குறிப்பாக, கடன் செயலிகள் வாயிலாக கடன் பெற்று, பொதுமக்களின் வங்கிக்கணக்குக்கு வரவு வைக்கப்படும் பணத்தை, தங்கள் கணக்குக்கு மாற்றிவிடுகின்றனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மக்கள் இன்னமும் மாறாமல் ஏமாந்து வருவது போலீசாருக்கு அதிர்ச்சியாக உள்ளது.