பழைய பாலங்களுக்கு புதிய பிரிவு துவக்கம்; மாநிலம் முழுதும் ஆய்வு செய்ய உத்தரவு
பழைய பாலங்களுக்கு புதிய பிரிவு துவக்கம்; மாநிலம் முழுதும் ஆய்வு செய்ய உத்தரவு
ADDED : ஜூன் 10, 2025 02:51 AM

சென்னை: பழைய பாலங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, நெடுஞ்சாலைத் துறையில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 1.35 லட்சம் தரைப்பாலங்கள், 8,543 சிறு பாலங்கள், 1,047 பெரிய பாலங்கள், 77 சாலை சந்திப்பு மேம்பாலங்கள், 157 ரயில்வே மேம்பாலங்கள், 92 ரயில்வே கீழ்பாலங்கள், 15 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 10 நடை மேம்பாலங்கள் என, 1.45 லட்சம் பாலங்கள் பராமரிக்கப்படுகின்றன.
இவை, அந்தந்த கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் வாயிலாக பராமரிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. பழுதடைந்த பாலங்களை கண்டறிந்து, அவற்றை புனரமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்தல், ஒப்பந்ததாரர் தேர்வு ஆகியவற்றில் சில நேரங்களில் தாமதம் ஆகிறது.
எனவே, பாலங்களை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு, நெடுஞ்சாலை துறையில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு தலைமை பொறியாளரின் கீழ், ஒரு கண்காணிப்பு பொறியாளர், நான்கு கோட்ட பொறியாளர்கள், இதற்கென நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலைகள் விரிவாக்கம், புதுப்பித்தல், புதிய பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். பாலங்களை முறையாக பராமரிப்பதற்கும், இந்த பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
இப்பிரிவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள பாலங்களை உடனடியாக ஆய்வு செய்யும்படி, துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார். அதன்பின், பாலங்களின் நிலை குறித்து, அவர்கள் அறிக்கை தயாரிக்க வேண்டும்.
பழுது பார்த்தல் பணி குறித்து, தொடர்புடைய கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்ட பொறியாளர்களுக்கு பரிந்துரை வழங்க வேண்டும்.
புதிய பாலங்கள் எங்கெங்கு தேவைப்படும் என்பது தொடர்பான அதிகாரிகளின் பரிந்துரைகளையும் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.