UPDATED : ஜூலை 26, 2026 05:33 AM
ADDED : ஜூலை 26, 2026 02:06 AM

உலகளாவிய பொருட்கள் ஏற்றுமதி சந்தையில், நாட்டின் 18வது மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தாலும், உலக வர்த்தகத்தில் அதன் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது. நம் நாட்டின் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு, ஆண்டுக்கு 44.30 கோடி டாலராக இருந்தாலும், அது உலகளாவிய பொருட்கள் ஏற்றுமதியில் வெறும் 1.80 சதவீத பங்களிப்பு மட்டுமே.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை ஒப்பிடும்போது, இந்த பங்கு திருப்திகரமானதாக இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
கடந்த 2018 முதல் 2023 வரை, இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதி பங்கு 1.70 சதவீதத்திலிருந்து 1.90 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலத்தில், சீனாவின் பங்கு 12.90 சதவீதத்திலிருந்து 14.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உலகளாவிய உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலிகள் மறுசீரமைக்கப்பட்டபோது உருவான புதிய வாய்ப்புகளை நம் நாடு, முழுமையாக பயன்படுத்த தவறியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் சீனா (3.58 லட்சம் கோடி டாலர்), அமெரிக்கா (2.08 லட்சம் கோடி டாலர்), ஜெர்மனி (1.68 லட்சம் கோடி டாலர்) ஆகியவை முன்னணியில் தொடர்கின்றன. அதே நேரத்தில், வியட்நாம் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. 2024ம் ஆண்டில் வியட்நாமின் பொருட்கள் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
பின்னடைவில் இந்தியா
ஆடை, ஜவுளி, தோல், காலணி உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த துறைகளில், இந்தியாவின் உலக வர்த்தக பங்கு 2013ம் ஆண்டின் 4.50 சதவீதத்திலிருந்து 2022ம் ஆண்டில் 3.50 சதவீதமாக குறைந்துள்ளது.
இதே காலத்தில் வியட்நாம் தனது பங்கை 5.90 சதவீதமாகவும், வங்கதேசம் 5.10 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு அதிக தளவாட செலவு தான் தடையாக உள்ளது என்ற பொதுவான கருத்தை சமீபத்திய தரவுகள் மறுக்கின்றன. 2023ம் ஆண்டு உலக வங்கியின் தளவாட செயல்திறன் குறியீட்டில் இந்தியா 38வது இடத்தில் உள்ளது.
சிங்கப்பூர் முதலிடத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும், தென் கொரியா 17வது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் தளவாட செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.97 சதவீதமாக உள்ளது. இது உலக சராசரியான 10 முதல் 11 சதவீதத்தைவிட குறைவு. எனினும், பொருட்களை விரைவாகவும், தடையின்றியும், முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையிலும் நகர்த்தும் திறனில் இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளது.
![]() |
ஏற்றுமதிக்காக நம் நாட்டில் பல்வேறு அரசு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டி.ஜி.எப்.டி.,), சுங்க வாரியம் (சி.பி.ஐ.சி.,) ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் (இ.சி.ஜி.சி.,) அபெடா, மெபெடா, ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள், எக்சிம் வங்கி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சாகர்மாலா திட்டம் என நீளும் பல அமைப்புகள் இருந்தாலும், அவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு போதுமானதாக இல்லை.
மேலும், துறைமுகங்களில் சராசரியாக 2.20 நாட்கள் சரக்குகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
உலகளாவிய தரநிலை 1.80 நாட்களாக இருக்கும் நிலையில், இந்த தாமதம் போட்டித்திறனை பாதிக்கிறது.
தேவை, புதிய அமைப்பு
இந்த சவால்களை சமாளிக்க 'எக்ஸ்போர்ட் லீன் பாடி' என்ற புதிய தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்புக்கு உரிமம் வழங்கும் அல்லது கட்டுப்பாட்டு அதிகாரம் இருக்காது. மாறாக, ஏற்றுமதி தொடர்பான அனைத்து அரசு அமைப்புகளையும் தொழில்நுட்பத்தின் வாயிலாக ஒருங்கிணைத்து செயல்திறனை மேம்படுத்தும் தளமாக இது செயல்படும்.
சிங்கப்பூரின் என்டர்பிரைஸ் எஸ்ஜி, தென் கொரியாவின் கோட்ரா ஆகிய அமைப்புகளின் செயல்முறையை முன்மாதிரியாக கொண்டு, 'எக்ஸ்போர்ட் லீன் பாடி' என்ற இ.எல்.பி., அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்று முக்கிய பணிகள்
இ.எல்.பி., அமைப்பு 3 முக்கிய பணிகளை மேற்கொள்ளும் என திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளுக்கும் இடையே நிகழ்நேர தகவல் பரிமாற்றம்; சிக்கியுள்ள ஏற்றுமதி சரக்குகளுக்கான விரைவு ஒருங்கிணைப்பு; துறைமுக செயல்திறன், சுங்க அனுமதி காலம், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பயன்பாடு போன்ற விபரங்களை பொதுவெளியில் வெளியிட்டு பொறுப்புணர்வை அதிகரித்தல் ஆகியவை இவை.
சுமார் 400 நிபுணர்களை கொண்ட மைய குழுவுடன் இந்த அமைப்பு செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக செயல்திறன்
ஆதார் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) ஜி.எஸ்.டி., நெட்வொர்க் (ஜி.எஸ்.டி.என்.,) போன்ற நாட்டின் வெற்றிகரமான தொழில்நுட்ப அமைப்புகளை முன்மாதிரியாக கொண்டு இது வடிவமைக்கப்படுகிறது.
இந்த அமைப்பை உருவாக்க 1,200 முதல் 1,400 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதியை 2 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, மூன்று முக்கிய துறைமுகங்களில் இ.எல்.பி., செயல்படுத்தப்பட்டு, 1,000 சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சரக்குகளை 48 மணி நேரத்திற்குள் அனுமதிக்கும் திட்டம் உள்ளது.
மூன்றாவது ஆண்டுக்குள் அனைத்து முக்கிய ஏற்றுமதி அமைப்புகளும் ஒரே தரவுத் தளத்தில் இணைக்கப்படுவதுடன், ஐந்தாவது ஆண்டில் உலக தளவாட செயல்திறன் குறியீட்டில் முதல் 25 நாடுகளில் இந்தியாவை கொண்டு வருவதும், உலக பொருட்கள் ஏற்றுமதியில் 2.50 சதவீத பங்கை எட்டுவதும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள் கருத்து
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாக செயல்பட்ட 'இன்வெஸ்ட் இந்தியா' அமைப்பை போலவே, ஏற்றுமதி துறையிலும் ஒருங்கிணைப்பு அமைப்பு தேவைப்படுவதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு தனித்தனி சீர்திருத்தங்கள் மட்டும் போதாது.
அனைத்து அமைப்புகளையும் ஒரே தளத்தில் இணைத்து, தாமதங்களை குறைத்து, செயல்திறனை உயர்த்தும் ஒருங்கிணைந்த நிர்வாகமே உலக சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் முக்கிய கருவியாக அமையும் என்பதே அவர்களது கருத்து.
--குஷி வாலியா

