தமிழகத்தில் 10 மாதங்களில் ஒன்பது புலிகள் இறப்பு: தேசிய ஆணையம் தகவல்
தமிழகத்தில் 10 மாதங்களில் ஒன்பது புலிகள் இறப்பு: தேசிய ஆணையம் தகவல்
UPDATED : அக் 12, 2025 01:10 AM
ADDED : அக் 12, 2025 01:09 AM

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், ஒன்பது புலிகள் இறந்துள்ளதாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் புலிகள் பாதுகாப்புக்காக, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த, 2022ம் ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கை அடிப்படையில், தமிழகத்தில், 306 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, மேகமலை போன்ற இடங்களில், புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. இதில், புலிகள் எண்ணிக்கையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
புகார்கள் புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தமிழகத்தில் புலிகள் கொல்லப்படுவது தொடர்கிறது. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில கும்பல்கள் தான், இதுபோன்ற வேட்டையில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன.
நாடு முழுதும் புலிகள் இறப்பு குறித்த விபரங்களை, அந்தந்த மாநில வனத்துறையினர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதியில் புலிகள் இறப்பு அதிகரிக்கும் போது, அதுகுறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்ளும்.
இந்த வகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு ஜன., முதல் அக்., முதல் வாரம் வரையிலான காலத்தில், ஒன்பது புலிகள் இறந்துள்ளதாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலும், அதை ஒட்டிய பகுதியிலும், ஆறு புலிகள் இறந்துள்ளன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், மூன்று புலிகள் இறந்துள்ளதாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துஉள்ளது.
அதிகரிப்பு இது குறித்து, 'எலபஸ் மாக்ஸிமஸ் இண்டிகஸ்' அமைப்பின் நிர்வாகி தீபக் நம்பியார் கூறியதாவது:
தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்பட்டாலும், வேட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறப்பும் அதிகரித்து வருகிறது.
நடப்பு ஆண்டில், புலி வேட்டையில் ஈடுபட்டதாக, பெரிய அளவில் வழக்குகள் எதுவும் பதிவாகாத நிலையில், புலிகள் இறப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கண்காணிப்பு முதுமலை, சத்தியமங்கலத்தில் புலிகள் நடமாட்டம், பாதுகாப்பு விஷயத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலிகள் இறப்பு விஷயத்தில், மிக குறைந்த விபரங்கள் மட்டுமே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தெரிவிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு சம்பவத்தின் போதும், புலியின் வயது, இறப்புக்கான காரணம், புகைப்படம் போன்ற விபரங்களை, வனத்துறை வெளியிட வேண்டும். ஆனால், குட்டிகள் இறப்பு இதில் விடுபடுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.