அடங்க மறு - வன்முறையை துாண்டுவது அல்ல: தொண்டர்களுக்கு திருமா புதிய விளக்கம்
அடங்க மறு - வன்முறையை துாண்டுவது அல்ல: தொண்டர்களுக்கு திருமா புதிய விளக்கம்
ADDED : அக் 12, 2025 01:24 AM

சென்னை: ''முறைத்து பார்த்ததால் வெறும் நான்கு தட்டு தட்டினர்; ஒழுங்காக கூட அடிக்கவில்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் நடந்த வி.சி., கூட்டத்தில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
ஒரு கட்சித் தலைவர், அவரின் காரின் முன் சென்று, ஒருவர் பைக்கை நிறுத்துகிறார். அவரின் பாதுகாப்பு தொடர்பாக எவனும் கேள்வி கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் இறங்கி சென்று தடுக்கவில்லை என கேட்கின்றனர். பழனிசாமி முன் ஒருவர் பைக்கை நிறுத்தினால், இப்படி கேள்வி எழுப்புவரா?
ஒரு நிமிடம் கூட இல்லை; என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவன் வந்து நின்று முறைத்தான். யாராக இருந்தால் என்ன என்று கேட்டான். அவர்களிடம் முறைத்ததால் அடித்தனர். அவன் என்ன ஜாதி, மதம் என்று கூட தெரியாது. 'ஓரமா நில்லுங்க' என்று போலீசார் சொல்கின்றனர்; அவர்களிடமும் முறைக்கிறான். முறைத்து பார்த்ததால் தான் அடி வாங்கினான். 'அவ்வளவு திமிராடா உனக்கு; ஆணவமாடா உனக்கு' என்றுதான் அடித்தனர். வெறும் நான்கு அடிதான்; ஒழுங்காகக் கூட அடிக்கவில்லை.
உடனே அவர் மயக்கம் போட்டு, நெஞ்சு வலிக்கிறது என்று நாடகமாடுகிறான்; எதற்காக இந்த நாடகமெல்லாம்?
போலீசாரிடம், 'அவன் தெரியாமல் செய்து விட்டான்; நீங்கள் ஏதும் தண்டிக்க வேண்டாம் விட்டு விடுங்கள்' என, நான் கூறி விட்டு சென்றேன். கட்சியினரையும் அமைதிப்படுத்தினேன். உடனே, 'திருமாவளவன் தான் அடிக்க சொன்னாரு' என்கின்றனர். 'அடங்க மறு' என்று தான் சொல்லி இருக்கிறேன். எந்த இடத்திலும் வன்முறையை துாண்டவில்லை. அடங்க மறு என்பது, ஒரு அரசியல் வார்த்தை.
இவ்வாறு அவர் பேசினார்.