'இண்டியா' கூட்டணிக்கு நிதீஷ் முழுக்கு? மீண்டும் பா.ஜ.,வுடன் கைகோர்க்க திட்டம்
'இண்டியா' கூட்டணிக்கு நிதீஷ் முழுக்கு? மீண்டும் பா.ஜ.,வுடன் கைகோர்க்க திட்டம்
UPDATED : ஜன 26, 2024 10:38 AM
ADDED : ஜன 26, 2024 02:03 AM

தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் திட்டமிட்டபடி சரியாக சென்று, எல்லாமே கச்சிதமாக அமைந்து விட்டால், வரும் பிப்ரவரி 4ல் பீஹார் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடியுடன், அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் மேடை ஏறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட, 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த இந்த கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், இதன் தலைவராக காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார். இதனால், இந்த கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிதீஷ் குமார் அதிருப்தி அடைந்தார். திரிணமுல் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்கள், தனக்கு எதிராக செயல்படுவதாக, நிதீஷ் குமார் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் தங்கள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தனித்து போட்டியிடப் போவதாக, திரிணமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் அறிவித்துள்ளதால், இண்டியா கூட்டணி கலகலத்துள்ளது.
அரசியல் அதிரடி
இதற்கிடையே, இந்த கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிதீஷ் குமார், எந்த நேரத்திலும் கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்ற செய்திகள் கசிந்து வருகின்றன. இதையடுத்து டில்லியில் பா.ஜ., மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். நிதீஷ் குமாரும், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., மேலிடத் தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரபரப்பான ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர். நிதீஷ் குமாரை அழைத்துக் கொள்வதற்கு பா.ஜ., தலைமை தயாராக இருந்தாலும், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''நிதீஷ் குமார், ஒரு நம்பகத்தன்மை இல்லாத அரசியல் தலைவர். நேரத்திற்கு ஒரு முடிவெடுப்பவர். யாராலும் அவரை ஏற்க முடியாது. என்னைப் பொறுத்தவரை அவருக்கான பா.ஜ., கதவு மூடிவிட்டது,'' என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் அரசியல் காரணங்களுக்காக, பீஹாரைச் சேர்ந்தவரான கிரிராஜ் சிங் போன்றவர்கள் இவ்வாறு கூறினாலும் இந்த விஷயத்தில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு பா.ஜ., தலைமை சென்றுவிட்டது. இதன்படி மூன்று யோசனைகள் ஆராயப்படுகின்றன. முதலாவது, பா.ஜ.,வைச் சேர்ந்தவரை பீஹார் முதல்வராக்குவது.
வாக்குறுதி
இரண்டாவது, நிதீஷ் குமாரே முதல்வராக நீடிப்பது. மூன்றாவது, அரசை கலைத்துவிட்டு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது. நிதீஷ் குமார் தரப்பிலிருந்து அளிக்கப்படும் வாக்குறுதிகளை வைத்து, இவற்றில் எதையாவது ஒன்றை அமல்படுத்திவிடலாம் என்று, பா.ஜ., மேலிட தலைவர்கள் கருதுகின்றனர். மேலும், தே.ஜ.,கூட்டணியை வலுவாக்கும் விதமாக, முதல்வர் பதவியை தியாகம் செய்வதற்கு தயாரான காரணத்திற்காக, மத்திய அமைச்சர் பதவியை நிதீஷ் குமாருக்கு வழங்கவும் பா.ஜ., தயாராகிவிட்டது.
இதற்கிடையில் தான், பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி 4ல், பீஹார் செல்கிறார். அங்குள்ள பெட்டையா என்ற இடத்தில், தேர்தல் பிரசாரத்தை துவங்கவுள்ளார். தற்போதைய சூழ்நிலைகள் சரியாக சென்று, எல்லாம் கச்சிதமாக அமைந்துவிட்டால், அன்றைய தினம் நடைபெறப்போகும் தேர்தல் பிரசார மேடையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரும் ஏறுவார் என தெரிகிறது.
இது, காங்., மட்டுமல்லாது, இன்னமும் இண்டியா கூட்டணியில் நீடித்துக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு, பிரதமர் தரப்போகும் நெத்தியடியாக அமையும் என்று பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது டில்லி நிருபர் -

