நெல்லை, கடலுார் மத்திய சிறைகளிலும் ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மர்மம்
நெல்லை, கடலுார் மத்திய சிறைகளிலும் ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மர்மம்
ADDED : மே 01, 2025 04:26 AM

மதுரை சிறையில் ஊழல், முறைகேடு நடந்தது போல, வேறு சில மத்திய சிறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக நெல்லை, கடலுார் சிறையில் ஊழல் நடந்தது குறித்து சிறப்பு தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தும், லஞ்சஒழிப்பு துறையில் புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகளில், கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள், அரசு துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில், மதுரை சிறையில் 2019 - 20, 2020 - 21 காலகட்டத்தில் பொருட்களை, 17 அரசு துறைகளுக்கு அனுப்பாமலும், கைதிகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தது போலவும் முறைகேடு நடந்ததாக ஐகோர்ட் உத்தரவுப்படி அப்போதைய கண்காணிப்பாளர் ஊர்மிளா உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இதேபோல, பிற மத்திய சிறைகளிலும் தணிக்கை செய்யப்பட்டதில், நெல்லை சிறையில் இருந்து, 27 அரசு துறைகளுக்கும், கடலுார் சிறையில் இருந்து ஏழு அரசு துறைகளுக்கும் அனுப்பாமல் முறைகேடு செய்தது தெரிந்தது.
குறிப்பாக, நெல்லை சிறையில், 1.50 கோடி ரூபாய்க்கும், கடலுார் சிறையில், 15 லட்சம் ரூபாய் அளவுக்கும் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்தாண்டு மதுரை சிறையின் ஊழல் வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம், அனைத்து சிறைகளிலும் தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆனால், மதுரை தவிர்த்து பிற சிறைகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நெல்லை சிறை முறைகேடு குறித்து, ஜாகிர்உசேன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். ஆனால், சிறைத்துறையிடம் புகார் அளிக்குமாறு ஜாகிர்உசேன் மனுவை லஞ்ச ஒழிப்புத்துறை திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஐகோர்ட் தலையிட்டதால், மதுரை சிறை ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. அதேபோல, நெல்லை, கடலுார் சிறைகளிலும் ஊழல் நடந்திருப்பது தணிக்கை ஆய்வில் தெரியவந்து புகார் அளித்த போதிலும், லஞ்சஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு சிறை முறைகேடு குறித்தும், தீர்வுகாண கோர்ட்டிற்கு செல்ல வேண்டியிருந்தால் அது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும். இதுகுறித்து அத்துறை டி.ஜி.பி., அபய்குமார் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் --