அ.தி.மு.க.-பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை: த.வெ.க. திட்டவட்டம்
அ.தி.மு.க.-பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை: த.வெ.க. திட்டவட்டம்
ADDED : அக் 30, 2025 05:56 AM

சென்னை: சென்னை பனையூரில் நேற்று நடந்த, த.வெ.க., உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின்,த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் அளித்த பேட்டி:
கரூர் பிரசாரத்திற்கு, விஜய் தாமதமாக வந்ததாக சொல்கின்றனர். அவரது வாகனத்தை, பின்தொடர்ந்து, 2,500 டூவீலர்கள் வந்தன. இதனால், ஒரு மணி நேரத்தில், கடக்க வேண்டிய இடத்தை கடக்க, ஏழு மணி நேரமானது. இதை போலீசார் கட்டுப்படுத்தவில்லை. கரூரில் பிரசார வாகனத்தை, விரைவாக அழைத்து வந்து நிறுத்தியதும் காவல்துறைதான்.
போலீசார் எதற்காக தடியடி நடத்தினர் என்பதை, சொல்ல மறுக்கின்றனர். நடந்த உண்மைகள், ஒவ்வொன்றாக வெளிவரும். அது கட்டுப்பாடற்ற கூட்டம் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்கிறார். காவல் துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என, அவர் ஒப்புக்கொள்கிறாரா.
கரூர் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை. பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரும் எங்களுடன் இருக்கின்றனர்.
குடும்ப பிரச்னை காரணமாக, ஒருவருக்கு அனுப்பிய பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அரசு வழங்கிய இழப்பீடும், அந்த குடும்பத்தில் வேறு ஒருவருக்குதான் அனுப்பப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி தொடர்பாக, ஒரு மாதத்திற்கு முன்பு, த.வெ.க., எடுத்த முடிவில், எந்தவித மாற்றமும் இல்லை.
கரூர் சம்பவத்திற்கு பின், கட்சி நிர்வாகிகள் யாரும் தலைமறைவாகவில்லை. நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வந்தோம். இந்த சம்பவத்திற்கு பிறகு கட்சியை முடக்க வேண்டும் என நினைத்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு வாயிலாக, அவர்களின் முயற்சிகள் தவிடு பொடியாகி விட்டன. எங்களை யாரும் தடுக்க முடியாது. எங்கள் கட்சியும், தலைவரும், இதைவிட பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மனநிலைக்கு தயாராகி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

