சட்டசபையில் கவர்னர் உரை தேவையில்லை; அரசியல் சட்டத்தை திருத்த தி.மு.க., முயற்சிக்கும்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
சட்டசபையில் கவர்னர் உரை தேவையில்லை; அரசியல் சட்டத்தை திருத்த தி.மு.க., முயற்சிக்கும்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
ADDED : ஜன 21, 2026 01:46 AM

சென்னை: ''கவர்னர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளை, பார்லிமென்டில் தி.மு.க., முன்னெடுக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில், கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பது தொடர்பான தீர்மானத்தை, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் கவர்னர் மீண்டும் ஒருமுறை, சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி, சபையில் இருந்து வெளியே சென்றுள்ளார். கவர்னரின் செயல், அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்பு சட்டம், 176ன்படி, கவர்னர் உரை என்பது, மாநில அரசால் தயாரிக்கப்பட்டு, கவர்னரால் முழுமையாக படிக்க வேண்டிய ஒன்று.
இதில், கவர்னர் தன் சொந்த கருத்துகளை தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ, சட்டத்தில் இடமில்லை.கவர்னர் உரை தெடர்பாக விளக்கம் கேட்பதற்கும், சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.
இருப்பினும், கவர்னர் ரவி சில விளக்கங்களை குறிப்பிட்டு, அரசுக்கு கடிதம் எழுதியதற்கு, பதிலும் அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் வேண்டுமென்றே சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார்.
நுாற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட மக்கள் சபையையும், அதன் மாட்சிமையையும் அவமதிக்கும் செயல் இது. கவர்னர் பதவி வேண்டாம் என, அண்ணாதுரை கூறியபோதும், கருணாநிதி அதை வழிமொழிந்தபோதும், அந்த பதவி இருக்கும் வரை, அதற்குரிய மரியாதை கொடுக்க, அவர்கள் தவறியதில்லை.
அவர்களது வழியை பின்பற்றி, நானும் இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை. கவர்னர் என்பவர், மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையை பேசுபவராக இருக்க வேண்டும். மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கும் முடிவுகளுக்கு, ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும். ஆனால், கவர்னர் ரவி அதற்கு மாறாக செயல்படுகிறார்.
மாநில நிர்வாகத்தை முடக்க, பொது மேடைகளில் அரசியல் பேசி, அவதுாறு பரப்பி வருகிறார். அது, அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும், அத்தகைய முயற்சியை சபையில் செய்ய, அவர் முனைவது ஏற்புடையதல்ல. இந்த சபையின் மாண்பை பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ளது.
ஆண்டுதோறும், அரசு சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும், அதை முறையாக வாசிக்காமல், கவர்னர் முரண்டு பிடிப்பதும் தொடர்வது நல்லதல்ல. கவர்னர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து, இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல; பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது.
ஒருநாள் செய்தியாக, இதை கடந்து விட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில், அரசின் கொள்கை அறிக்கையை, கவர்னர் முறையாக வாசிப்பது நடைமுறை. இந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும்போது, அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி, சாதாரணமாகவே அனைவரின் மனதிலும் எழும்.
எனவே, ஆண்டின் துவக்கத்தில் கவர்னர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளை, இந்தியா முழுதும் உள்ள ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் துணையோடு, பார்லிமெண்டில் தி.மு.க., முன்னெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

