தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை: கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை: கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,
UPDATED : ஜூலை 09, 2025 02:16 PM
ADDED : ஜூலை 09, 2025 04:34 AM

கோவை: ''கடந்த நான்கு ஆண்டுகால ஸ்டாலின் மாடல் ஆட்சியைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால், சிம்ப்ளி வேஸ்ட்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, கோவையில் நடந்த பிரசார சுற்றுப்பயணத்தில், தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்தார்.
'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான நேற்று, கோவை வடக்கு தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசியதாவது:
அ.தி.மு.க.,வின் 10 ஆண்டு கால ஆட்சியில், கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி, கூட்டுக் குடிநீர் திட்டம், பாலங்கள் என அதிக திட்டங்களைத் தந்துள்ளோம். தி.மு.க., இந்த 4 ஆண்டு காலத்தில் ஒன்றுமே செய்யவில்லை. பொதுக்கூட்டங்களில் பேசும் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சி இருண்ட கால ஆட்சி என்கிறார். கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகத்தான்தெரியும் ஸ்டாலின்; கண்களைத் திறந்து பாருங்கள். அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை திறந்து வைத்து, ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க.,
தி.மு.க.,வுக்கு பயம்
எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது என ஸ்டாலின் பேசுகிறார். நீங்கள் கூட்டணி பலத்தை நம்பி இருக்கிறீர்கள். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். மக்களுக்கு செய்திருக்கிறோம். எனவே, மக்கள் சிறந்த ஆட்சி எது என சீர்துாக்கிப் பார்த்து, 2026ல் எங்களுக்கு வாக்களிப்பர்.
எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை. அ.தி.மு.க.,தலைமையில்தான் கூட்டணி. இ.பி.எஸ்.,தான் முதல்வர் வேட்பாளர் என அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டார். எங்களைப் பார்த்து தி.மு.க., கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் பலமாக இருக்கிறோம். இன்னும் கட்சிகள் வரும். 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
குப்பை அரசாங்கம்
200 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால்தானே ஓட்டுப் போடுவர். எந்த திட்டத்தையாவது கோவைக்கு ஸ்டாலின் தந்திருக்கிறாரா? தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை. அவலமான ஆட்சி நடக்கிறது. மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. எல்லா வரிகளும் உயர்ந்துள்ளன. குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு தி.மு.க., அரசுதான். இனி, தி.மு.க., அரசாங்கத்தை, 'குப்பை அரசாங்கம்' என்றே அழைப்போம்.
கோவில் சொத்து
கோவில்களில் உள்ள பணம், அவர்களின் கண்ணை உறுத்துகிறது. கோவில் வளர்ச்சிக்காக பக்தர்கள் கொடுத்த பணத்தை, கல்லுாரி கட்டுவதற்கு எடுத்து பயன்படுத்துகின்றனர். ஏன் அரசு பணத்தில் கல்லுாரி கட்ட முடியாதா. நாங்கள் கட்டினோமே. வேண்டுமென்றே, திட்டமிட்டே, கோவில் பணத்தை எடுத்து செலவிடுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்.
வேளாண் பல்கலைக்குச் சொந்தமான, 222 ஏக்கர் நிலம் அருப்புக்கோட்டையில் உள்ளது. அங்கு ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு பதிலாக, சிப்காட் அமைக்கப் போகின்றனர். சிப்காட் அமைக்க வேறு நிலம் இல்லையா. வேளாண் ஆராய்ச்சிக்கு நிலம் ஒதுக்கினால்தானே விவசாயம் வளரும்.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரியஇழப்பீடு வழங்கப்படும். ஸ்டாலின் ஆட்சி பற்றி ஒரே வரியில் சொல்வதானால், 'சிம்ப்ளிவேஸ்ட்'. இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் உட்பட, கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

