நிரந்தர மாஜிஸ்திரேட் நியமனம் இல்லை: சுங்க வழக்குகள் விசாரணையில் தொய்வு
நிரந்தர மாஜிஸ்திரேட் நியமனம் இல்லை: சுங்க வழக்குகள் விசாரணையில் தொய்வு
ADDED : ஜன 06, 2025 12:09 AM

சுங்க வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிரந்தர மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை. இது, வழக்குகள் விசாரணையில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.
சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட, 750க்கும் மேற்பட்ட வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சுங்கத்துறை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், 2019 முதல் செயல்படுகிறது.
இங்கு விமானம் மற்றும் கடல் வழியாக கடத்தி வரப்படும், தங்கம், வன உயிரினங்கள், வெளிநாட்டு, 'கரன்சி'கள் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பாக, சுங்கத்துறை பதிவு செய்யும் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
விசாரணை
தற்போது, 140க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகள், 2022 வரை தடையின்றி மாஜிஸ்திரேட்டால் விசாரிக்கப்பட்டன. அதன்பின், வழக்குகளின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், 2022 முதல், சிறப்பு நீதிமன்ற வழக்குகளை விசாரிக்க, நிரந்தரமாக மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை என, சுங்கத்துறை வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஆலந்துார் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் புவனேஸ்வரி, சிறப்பு நீதிமன்ற பணிகளை கூடுதலாக கவனித்து வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக, சிறப்பு நீதிமன்றத்துக்கு நிரந்தரமாக மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு மாஜிஸ்திரேட்டால், சிறப்பு நீதிமன்ற பணிகளை முழுமையாக கவனிக்கவும் இயலவில்லை.
பெரும்பாலான நாட்கள், முழு நேரமும் சிறப்பு நீதிமன்ற பணிகள் நடப்பதில்லை. கடந்த சில வாரங்களாக, வாரத்தில் ஓரிரு அமர்வுகள் கூட நடப்பதில்லை. பெரும்பாலும் ஜாமின் மற்றும் ஜாமின் நிபந்தனைகள் தளர்வு தொடர்பான விசாரணை மட்டுமே நடக்கிறது.
நிலுவையில் உள்ள, 140க்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி, சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட, 750க்கும் அதிகமான வழக்குகளில், இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.
நடவடிக்கை
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், விசாரணை தள்ளி வைக்கப்பட்டு கொண்டே செல்கிறது. கடந்த எட்டு மாதங்களில், சென்னை விமான நிலையத்தில், 136.89 கோடி ரூபாய் மதிப்பிலான, 205 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.
இது தொடர்பாக, 481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட, 76 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிடிபடும் கடத்தல் பொருளின் மதிப்பு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என்றால், கைது நடவடிக்கை இருக்கும். அதற்கு குறைவு என்றால், கைது நடவடிக்கை இருக்காது.
ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்பு கொண்ட வழக்குகள், தீர்வு காணும் அதிகாரியால் 'பைசல்' செய்யப்படும். அவ்வாறு பைசல் செய்யப்படாமல், ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் - --.