ADDED : ஜன 09, 2026 04:58 AM

அ.தி.மு.க.,வில் சசிகலா, பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை,” என்று, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
டில்லி சென்றிருந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க., இணைந்துள்ள நிலையில், தே.மு.தி.க., புதிய தமிழகம், தினகரனின் அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளை இணைப்பது குறித்து, அமித் ஷாவுடன் பழனிசாமி பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டில்லியில் நேற்று காலை பழனிசாமி அளித்த பேட்டி:
புதுக்கோட்டைக்கு வந்த அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை. அதனால், அவரை டில்லியில் சந்தித்தேன். தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., இணைந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் சேர உள்ளன.
இப்போது, வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது. எல்லா கட்சிகளும் சேர்ந்த பின், தொகுதி விபரத்தை அறிவிப்போம். வலுவான கூட்டணி அமைக்கப்படும்.
சசிகலா, பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் இல்லை; அவர்களுக்கு இடம் கிடையாது என்பதை பலமுறை கூறி விட்டேன். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டாம். இதோடு, 50 தடவை நான் சொல்லி விட்டேன்.
கடந்தாண்டு ஏப்., 11ல் அமித் ஷா சென்னை வந்தபோதே, 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன்' என்று சொல்லி விட்டார். அதேநிலை தொடர்கிறது; அ.தி.மு.க., வலிமையாக இருக்கிறது. கடந்த 2021ல், எங்கள் கூட்டணி 75 தொகுதிகளில் வென்றது. வெறும் 2 லட்சம் ஓட்டுகளில் 43 தொகுதிகளை இழந்தோம்.
தினகரனின் அ.ம.மு.க., எங்கள் கூட்டணிக்குள் வருமா என்ற கேள்விக்கு குத்துமதிப்பாக சொல்ல எதுவும் இல்லை. சில கட்சிகள் எங்களோடு வரும்; பேச்சு நடத்துகின்றன. அதை வெளிப்படையாகப் பேச முடியாது. ஒவ்வொரு கட்சியாக சேரும்போது நிச்சயமாக தகவல் தெரிவிக்கப்படும்.
டில்லியில் இருந்து தமிழகத்தை யாரும் ஆள முடியாது. எங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
கூட்டணி முடிவுகளை, அமித் ஷாவே எடுக்கிறார் என்பது ஊடகங்கள் பரப்பும் தவறான செய்தி. அமித் ஷா பெரியவரா, பழனிசாமி பெரியவரா என்பதல்ல பிரச்னை. மக்கள் தான் உண்மையில் பெரியவர்கள்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் 'மிசா' காலங்களில், தி.மு.க.,வினரை கைது செய்த காங்கிரசுடன் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி வைத்துள்ளார். பா.ஜ.,வை மதவாத கட்சி என தி.மு.க., கூறுகிறது.
ஆனால், கடந்த 1999 லோக்சபா தேர்தல், 2001 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி வைத்தது. எல்லா கட்சிகளுமே, எங்களுடனும் தி.மு.க.,வுடனும் கூட்டணி வைத்திருந்தன என்பதுதான் வரலாறு.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், அரசு ஊழியர்களை ஏமாற்றும் நாடகம். 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டமும், மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் தான்.
'தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்' என, முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் வெளியிட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு, 5.50 லட்சம் கோடி ரூபாய் கடனைத்தான் விட்டுச் சொல்கிறார்.
தி.மு.க., ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். ஊழல் அமைச்சர்கள் மீது, எப்.ஐ.ஆர்., போடுமாறு, அமலாக்கத்துறை சார்பில், இரண்டு முறை தகவல் தந்தும் கூட, அதை தி.மு.க., அரசு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

