ரேஷன் கடை வேலைக்கு கேட்குறாங்களாம் 'நோட்டுக்கட்டை'; விஜய் கட்சி வளர்ச்சியை தடுக்க ஆளுங்கட்சி முட்டுக்கட்டை
ரேஷன் கடை வேலைக்கு கேட்குறாங்களாம் 'நோட்டுக்கட்டை'; விஜய் கட்சி வளர்ச்சியை தடுக்க ஆளுங்கட்சி முட்டுக்கட்டை
UPDATED : நவ 26, 2024 04:41 AM
ADDED : நவ 25, 2024 10:50 PM

பணி நிமித்தமாக, ஸ்கூட்டரில் ஆர்.எஸ்.புரத்துக்கு புறப்பட்டாள் சித்ரா.
காந்திபுரம் கிராஸ்கட் ரோடு வழியாக சென்றபோது, ''என்னக்கா... 'கோவை விழா' அமர்க்களமா நடந்துச்சாமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''ஆமா, மித்து! படுசூப்பரா இருந்துச்சு. 'காந்தாரா' பாடலுக்கான டான்ஸ் பார்வையாளர்களை சொக்க வச்சிருச்சு. கிராஸ்கட் ரோடு கடைசி வரைக்கும் இசைக்கலைஞர்கள் நடந்து போனாங்க... பரதநாட்டியம், வள்ளி கும்மியாட்டம், பறை இசை, ஜமாப்ன்னு ஏகப்பட்ட நிகழ்ச்சி நடந்துச்சு. வீதியே விளக்குகளால் ஜொலிச்சது; நிகழ்ச்சி சண்டே நடந்ததுனால, மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கா இருந்துச்சு. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கிட்டாங்க... கோவை விழா 'சக்சஸ்'ஸா நடந்துருக்கு...,''
''மினிஸ்டர் செந்தில்பாலாஜியும் விழாவுக்கு வந்திருந்தாராமே...''
''ஆமாப்பா... சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டாரு. சொந்த மாவட்டமான கரூருக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை விட, நம்மூர்ல அதிக கவனம் செலுத்துறாரு. 2026 எலக்சன்ல, 10 தொகுதியையும் கைப்பத்தணும்ங்கிறது மேலிட உத்தரவாம்; இப்பவே, 'ஸ்கெட்ச்' போட்டு வேலையை ஆரம்பிச்சிட்டாராம்...''
மாத்துவாங்களா?
''மாவட்ட செயலாளர் களை மாத்தப் போறதா உடன்பிறப்புகள் பேசிக் கிட்டாங்களே...''
''இப்போ இருக்கற 'மாவட்டங்களை' மாத்துறதுக்கு வாய்ப்பு குறைவுன்னு சொல்றாங்க. ரெண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம் நியமிக்கறதுக்கு தலைமையில பிளான் வச்சிருக்காங்களாம். அதனால, கூடுதலா ரெண்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கறதுக்கு வாய்ப்பு இருக்குதாம். அந்த பதவியை கைப்பத்துறதுக்கு நிர்வாகிகள் பலரும் முட்டி மோதுறாங்களாம்,''
''மாவட்டமோ, ஒன்றியமோ இல்லாம கட்சிக்காரங்களை பார்க்கறதுக்கு மினிஸ்டர் தயங்குறதா சொல்றாங்களே...''
''அது, ஒன்னுமில்லை. எதுக்கெடுத்தாலும் கட்சிக்காரங்க சென்னைக்கு படையெடுக்குறாங்களாம். மாவட்டத்தும், ஒன்றியத்துக்கும் தெரியாம சென்னையில முகாமிட்டு, 'காரியம்' சாதிக்கிறாங்களாம்... எங்களுக்கு என்ன மரியாதைன்னு புலம்புனாங்களாம். அதனால, நிர்வாகிகள் யாருக்கும் தெரியாம கட்சிக்காரங்களை சந்திக்கிறதில்லையாம். கட்சி பிரச்னை எதுவா இருந்தாலும் ரொம்ப கவனமா கையாள்றாராம்,''
ஆளுங்கட்சி 'மூவ்'
''நாம் தமிழர் கட்சிக் காரங்க ஆளுங்கட்சிக்கு தாவிட்டாங்களே... விசாரிச்சீங்களா...''
''அதுவா... விஜய் கட்சியில இணையறவங்க பெரும்பாலும் இளைஞர்களா இருக்காங்க; 2026 எலக்சன்ல 50 சதவீத வாக்காளர்கள் இளைஞர்களா இருப்பாங்களாம். அதனால, ஆளுங்கட்சி தரப்பு உஷாராகி இருக்கு. லோக்சபா தேர்தல்ல சீமான் கட்சி, 82 ஆயிரம் ஓட்டு வாங்கியிருக்கு. அவுங்க கட்சிக்காரங்க விஜய் கட்சிக்கு தாவுறதுக்கு முன்னாடி, ஆளுங்கட்சிக்கு இழுக்கற வேலையில ஈடுபடுறாங்களாம். விஜய் கட்சியின் ஓட்டு வங்கி தெரியாட்டியும், வலுவான கட்சியா உருவெடுத்தா, ஆளுங்கட்சிக்கு ஆபத்தாயிடும்னு நெனைக்கிறாங்களாம்,''
ஆளுங்கட்சியிலும் கோஷ்டி
''காங்கிரஸ் கட்சியில இருக்கற மாதிரி, தி.மு.க.,விலும் ஏகப்பட்ட கோஷ்டியா பிரிஞ்சு இருக்காங்களாமே...''
''ஆமாப்பா... உண்மைதான்! கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வடவள்ளி ஏரியாவுல மினிஸ்டர் ஆய்வு செஞ்சாராம். அந்த ஏரியா கவுன்சிலர் யாருன்னு கேட்டாராம்... அந்த ஏரியா லேடி கவுன்சிலர் வரலையாம்; அவருக்கு பதிலா கணவர் வந்திருக்காரு. வடவள்ளியில தி.மு.க.,காரங்க மூணு பிரிவா செயல்படுறாங்களாம். அதனால, கவுன்சிலரின் கணவருக்கு எதிர்கோஷ்டி, இந்த விஷயத்தை பரப்பி விட்டுட்டு இருக்காங்களாம்...''
வர்றாரு அண்ணாமலை
''அதெல்லாம் இருக்கட்டும்... வெளிநாட்டுக்கு போயிருக்கிற அண்ணாமலை எப்போ வர்றாரு... ஏதாச்சும் 'அப்டேட்' இருக்குதா...''
''மித்து, நம்மூர்ல இந்த மாசக்கடைசியில ரெண்டு நாள் கருத்தரங்கு நடக்கப் போகுது; ரெண்டாம் நாள் நிகழ்ச்சியில அண்ணாமலை கலந்துக்கப் போறாராம். அவரது வருகையை அமர்க்களமா கொண்டாடுறதுக்கு தாமரைக்கட்சிக்காரங்க தயாரா இருக்காங்களாம். இப்பவே... சிங்காநல்லுார் ஏரியாவுல போஸ்டர் ஒட்டியிருக்காங்க. அவர் வந்ததுக்கு அப்புறம் அரசியல் களத்துல மறுபடியும் அனல் பறக்கும்னு சொல்றாங்க...'' என்றபடி, வடகோவை மேம்பாலத்தை கடந்து, சிந்தாமணி பகுதியில், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.
ஜன்னலில் காத்திருக்கு சரக்கு
பேக்கரி ஒன்றுக்குள் நுழைந்த மித்ரா, காபி, எக் பப்ஸ் ஆர்டர் கொடுத்த பின், ''இப் பெல்லாம்... காலையில, 6:00 மணிக்கெல்லாம் சரக்கு சேல்ஸ் ஆரம்பிச் சிடுதாமே...'' என, கேட்டாள்.
''அந்தக் கொடுமையை... ஏன் கேக்குறே... கவுண்டம்பாளையம் பக்கத்துல இருக்கற, 1,568 என்கிற எண்ணுள்ள மதுக்கடையோடு மதுக்கூடமும் (பார்) செயல்படுதாம். காலை, 6:00 மணிக்கே சரக்கு சேல்ஸ் ஆரம்பிச்சிடுது. கடைக்கு பின்னாடி இருக்கற ஜன்னல் வழியா சேல்ஸ் பண்றது இந்த ஏரியாவுல பிரபலமாம். இதுல... ஹைலைட்டா.. 'கட்டிங்' கொடுக்கறது 'குடி'மகன்களுக்கு குஷியா இருக்குதாம். போலீஸ்காரங்க கண்டுக்காம இருக்கறதுனால, 24 மணி நேரமும் சேல்ஸ் பட்டைய கெளப்புதாம்...''
இன்ஸ்.,களுக்கு கடுப்பு
''ரூரல் எஸ்.பி.,யை பார்த்து, சிட்டி போலீஸ்காரங்களும் அதிரடியில இறங்கிட் டாங்களாமே...'' என்றபடி, டேபிளுக்கு வந்த காபியை உறிஞ்சினாள் மித்ரா.
''ஆமாப்பா... ஸ்டூடன்ஸ்களுக்கு போதைப்பொருள் விக்கிற கும்பலை 'டார்க்கெட்' பண்ணி, எஸ்.பி., கார்த்திகேயன் ஆக்சன் எடுத்துட்டு வர்றாரு. சிட்டி லிமிட்டுல கஞ்சா சேல்ஸ், மசாஜ் சென்டர், சட்ட விரோதமா செயல்படுற 'பார்' சம்பந்தமா, டெபுடி கமிஷனர் ஸ்டாலின் தலைமையில செயல்படுற டீம் ஆக்சன் எடுக்குது...''
''இதெல்லாம் மாமூலுக்கு இடைஞ்சலா இருக்கறதுனால, ஸ்டேஷன் இன்ஸ்.,களுக்கு பிடிக்கலையாம். அதனால, தனிப்பிரிவை கலைக்கறதுக்கு 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்களாம். ஸ்பா, மசாஜ் சென்டர் அதிகமா செயல்படுற ஏரியாவுல இருக்கற இன்ஸ்., ஒருத்தரு, தனிப்பிரிவுல இருக்கற எஸ்.ஐ.,யை 'டார்கெட்' பண்ணி அவதுாறு பரப்பிட்டு இருக்காராம். கிளப்புக்கு போயி, ஓசியில சரக்கு அடிச்சுட்டு போதையில ஆட்டம் போட்டிருக்காருன்னு சமூக வலைதளத்துல பரப்பி விட்டிருக்காங்க; உளவுப்பிரிவு போலீஸ்காரங்க, சம்பந்தப்பட்ட கிளப்புக்கு நேர்ல போயி, 'என்கொயரி' செஞ்சிட்டு வந்திருக்காங்க,'' என்றபடி, எக் பப்ஸ் சாப்பிட ஆரம்பித்தாள் சித்ரா.
போஸ்டிங் 10 'ல'கரம்
''ரேஷன் கடையில இருக்கற காலி பணியிடத்துக்கு நேர்காணல் நடக்குதாமே... லட்சக்கணக்குல பேரம் பேசுறாங்களாமே...''
''ஆமா... மித்து! நானும் கேள்விப்பட்டேன். ரூரல் ஏரியாவை சேர்ந்த ஆளுங்கட்சியை சேர்ந்த சில புள்ளிகள், ஒரு போஸ்ட்டிங்கிற்கு, 10 'ல'கரம் வரை பேரம் பேசுறாங்களாம். மாசம், 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் கெடைக்கற வேலைக்கு இவ்ளோ லட்சம் தரணுமான்னு, வேலை கேட்டு 'அப்ளை' செஞ்சவங்க, 'அப்செட்'டுல இருக்காங்களாம்...'' என்ற சித்ரா, பேக்கரியில் இருந்து வெளியே வந்து, ஸ்கூட்டரை மீண்டும் ஸ்டார்ட் செய்தாள்.
கவுன்சிலர்ஸ் சோகம்
அவ்வழியாகச் சென்ற கார்ப்பரேஷன் ஜீப்பை கவனித்த மித்ரா, ''என்னக்கா... கார்ப்பரேஷன் சப்ஜெக்ட் ஒன்னுமே சொல்லலையே...'' என, கொக்கி போட்டாள்.
''நம்மூர் கார்ப்பரேஷன்ல ஆளுங்கட்சி கவுன்சிலரா இருந்தாலும், கூட்டணி கட்சி கவுன்சிலரா இருந்தாலும்... சரி... ஆபீசர்ஸ் மதிக்கறதே இல்லையாம்.. கவுன்சிலர்ஸ் சொல்ற வேலையை ஆபீசர்ஸ் செஞ்சு கொடுக்கறதே இல்லையாம். இந்த மாசம் தீர்மானங்கள் அதிகமா இல்லாட்டியும்... மன்ற கூட்டம் நடத்தியாகணும்னு கவுன்சிலர்கள் சொல்லிட்டு வர்றாங்களாம்...''
பின்இருக்கையில் அமர்ந்திருந்த மித்ரா, ''ஏன்க்கா... ஆளுங்கட்சியை சேர்ந்த 'மாஜி' லேடியின் உறவினர் ஒருத்தரை, 'அரெஸ்ட்' பண்ணி, ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்களாமே...'' என, கேட்டாள்.
''ஆமாப்பா... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெரியப்பா முறை வருமாம். 'மாஜி' லேடி தரப்புல பேரம் பேசியிருக்காங்க. ஒத்துக்காததால கேஸ் பைல் பண்ணி, ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்களாம். இந்த விஷயத்தை வெளியே 'லீக்' பண்ணக் கூடாதுன்னு போலீசுக்கும் அழுத்தம் கொடுத்திருக்காங்க. இருந்தாலும், கொஞ்சம் லேட்டா வெளிச்சத்துக்கு வந்திருக்கு,'' என்றபடி, ஆர்.எஸ்.புரத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.